பிள்ளையார்பட்டி கோயிலில் அடிப்படை வசதிகள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
பிள்ளையார்பட்டி கோயிலில் அடிப்படை வசதிகள் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : பிப் 18, 2024 06:36 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தி, அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி மீனாட்சிபுரம் வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் குடிநீர், நடமாடும் கழிப்பறை, ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் வழிபட தனியாக சிறப்பு வரிசை ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர், அறநிலையத்துறை இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோயில் நிர்வாகம் தரப்பு: மனுதாரர் தெரிவித்த குறைகளை அறங்காவலர்கள் ஏற்கனவே நிவர்த்தி செய்துவிட்டனர். அறங்காவலர்கள் முடிவெடுத்து மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி, அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர்.
இந்த ஏற்பாடுகள் புத்தாண்டு உட்பட அனைத்து பண்டிகை நாட்களிலும் தொடர்கிறது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.