மேகதாது விவகாரத்தில் துரோகம்: தி.மு.க., மீது அன்புமணி புகார்
மேகதாது விவகாரத்தில் துரோகம்: தி.மு.க., மீது அன்புமணி புகார்
ADDED : நவ 23, 2025 01:05 AM

சென்னை: 'மேகதாது அணை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
மேகதாது அணை தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, காவிரியின் குறுக்கே, புதிய அணை கட்டும் ஏற்பாடுகளை, கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், தி.மு.க., அரசு அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை பணிகளை மேற்கொள்ள, புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது அணை கட்ட, விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், இதில், தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்கவில்லை.
ஏற்கனவே, தி.மு.க., அரசின் துரோகத்தால் தான், காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே, கர்நாடகாவில் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி அணைகள் கட்டப்பட்டன. அந்தப் பட்டியலில், மேகதாது அணையும் இணைந்து விடக் கூடாது.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

