வாடிக்கையாளர் சேவை மைய எண் 'ஆன்லைனில்' தேடுவோர் உஷார்
வாடிக்கையாளர் சேவை மைய எண் 'ஆன்லைனில்' தேடுவோர் உஷார்
ADDED : ஏப் 02, 2025 06:39 AM

சென்னை : வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வங்கி கிளை தொடர்பு எண்கள், 'ஆன்லைன் பேங்கிங்' மற்றும் ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு புகார்கள் குறித்த விபரங்களை அறிய, வங்கிகள் சார்பில், வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை மைய எண்களை இணையதளத்தில் தேடுகின்றனர்.
இவ்வாறு தேடுவோரை குறி வைத்து, மோசடி கும்பல், சில போலி எண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. வங்கி அறிவித்த எண் எது என்று தெரியாமல், மோசடி கும்பல் பதிவேற்றம் செய்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது, அதை பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே, வங்கி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை, இணையத்தில் தேடாமல், சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று, தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இது மோசடியில் இருந்து தப்பிக்க உதவும். இவ்வாறு அவர்கள் கூறினார்.