ஒடிசா பெண் கூட்டு பலாத்காரம் பீஹார் கொடூர வாலிபர்கள் கைது
ஒடிசா பெண் கூட்டு பலாத்காரம் பீஹார் கொடூர வாலிபர்கள் கைது
UPDATED : பிப் 20, 2025 06:33 AM
ADDED : பிப் 20, 2025 01:17 AM

திருப்பூர்:ஒடிசா தம்பதிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று, கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த, 17 வயது சிறுவன் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழில் நகரான திருப்பூருக்கு, கடந்த 17ம் தேதி கோவையில் இருந்து வேலை தேடி, 3 வயது குழந்தையுடன் ஒடிசா தம்பதி வந்தனர்.
ரயில்வே ஸ்டேஷனில் இருந்த இவர்களை நீண்ட நேரமாக நோட்டமிட்ட, பீஹாரைச் சேர்ந்த, மூன்று பேர் தம்பதியிடம் பேசினர்.
பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சுமி நகரில் உள்ள தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். வேலை தொடர்பாக ஒரு நிறுவனத்தில் பேசி விட்டு, அன்றிரவு உணவு வாங்கிக் கொடுத்தனர். அறையில் தங்கிக் கொள்ளுமாறு கூறினர்.
இதை நம்பி குழந்தையுடன் தம்பதியும் இரவு தங்கினர். நள்ளிரவு, கணவர், குழந்தையை கத்தி முனையில் மிரட்டி, 27 வயது பெண்ணை, மூன்று பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி, அவர்களை வெளியே அனுப்பினர். மறுநாள் அந்த தம்பதி, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக பீஹாரை சேர்ந்த, முகமது நதீம், 24, முகமது டேனிஸ், 25, மற்றும் 17 வயது சிறுவன் என, மூவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.