ADDED : பிப் 11, 2024 12:12 AM
சென்னை:பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர், சுக்னனா குமாரி தியோ சென்னையில் காலமானார்.
ஒடிசா மாநில ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் தலைவராகவும், அம்மாநில முதல்வராகவும் நவீன் பட்நாயக் உள்ளார்.
இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் வி.சுக்னனா குமாரி தியோ, 87. வயது முதிர்வு காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை மோசமான நிலையில், அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்து சுக்னனாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் சுக்னனா உயிரிழந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்த சுக்னனா, 10 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.
பலமுறை அமைச்சர் பதவி அவரை தேடி வந்தபோதும், ராணி எப்படி அமைச்சராக முடியும் எனக்கூறி நிராகரித்தார்.
சென்னை பல்கலையில், சமூகப்பணி பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். பட்டியலின பெண்களின் முன்னேற்றத்துக்கு தீவிரமாக பணியாற்றி வந்த இவரின் உயிரிழப்பு, ஒடிசா மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.