தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் அண்ணாமலைக்கு அரசு பதில்
தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் அண்ணாமலைக்கு அரசு பதில்
ADDED : ஜன 15, 2024 02:10 AM

சென்னை: 'அண்ணாமலை பகல் கனவு காண்பது போல, தமிழகத்தில் ஒரு போதும் மும்மொழி கொள்கை உருவாக்க வாய்ப்பில்லை; இருமொழி கொள்கையே தொடரும்' என தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்த அரசு அறிக்கை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஊட்டுவதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
பாரம்பரியம்
இது தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வெகு விரைவில் மும்மொழி கொள்கையை, தமிழக அரசு கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ அண்ணாமலை முயலக்கூடாது. தமிழக அரசு, அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகத்திற்கென்று வரலாறும், பாரம்பரியமும் உண்டு.
செயற்கை நுண்ணறிவுக்கென தனி கொள்கை, தமிழகத்தில் 2020ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்வி கொள்கை என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே, இவையெல்லாம் நடந்தன. தேசிய கல்வி கொள்கையை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
அதில் மாநிலங்கள்அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டு இருக்கும் பலவற்றை, தமிழகம் ஏற்கனவே அடைந்துவிட்டது.
தேசிய அளவில் மாணவர் சேர்க்கையை 50 சதவீதம் ஆக்க வேண்டும் என, தேசிய கல்வி கொள்கை கூறுகிறது.
அகில இந்திய மேல்நிலை கல்வி ஆய்வறிக்கையின்படி தமிழக மாணவர் சேர்க்கை சதவீதம், 2019-20ம் கல்வி ஆண்டிலேயே, 51.4 சதவீதம் எட்டிவிட்டது.
வரும் 2035ம் ஆண்டிற்குள் 50 சதவீதத்தை எட்ட வேண்டும் என, தேசிய கல்வி கொள்கையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னோடி
தமிழகம் 2035ம் ஆண்டில் 100 சதவீதத்தை எட்டிவிடும். தமிழக அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்வி கொள்கையில் இணைத்துவிட்டு, தேசிய கல்வி கொள்கையின்படி தமிழக அரசு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்கு உரியது.
தொழில்நுட்பம் சார்ந்து, தமிழகத்துக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை.
நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் எப்போதும், தொழில்நுட்ப துறையில், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில், முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதை, அனைவரும் அறிவர்.
அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழகத்தில் ஒரு போதும் மும்மொழி கொள்கை உருவாக்க வாய்ப்பில்லை; இருமொழி கொள்கையே தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.