சிறைகளில் 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு: வழக்கு 'பைசல்'
சிறைகளில் 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு: வழக்கு 'பைசல்'
ADDED : மார் 01, 2024 12:53 AM
மதுரை:மத்திய சிறைகளில் மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததை பதிவு செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கை பைசல் செய்தது.
மதுரை ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட பல்வேறு வகை சிறைகளில் சுகாதாரம் பேணுவது, கைதிகளின் உடல், மனநிலை, சிகிச்சை குறித்து கண்காணிப்பாளர்களுக்கு அறிக்கை அளிப்பது மருத்துவ அலுவலர்களின் கடமை.
இதற்காக, மத்திய சிறை வளாகத்தில் மருத்துவ அலுவலர்கள் வசிக்க குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அங்கு மருத்துவ அலுவலர்கள் வசிப்பதில்லை. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கைதிகளின் இறப்பு அதிகரித்துள்ளது.
மத்திய சிறைகளில், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நிறுவ நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு விசாரித்தது:
அரசு தரப்பு: சிறைகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.

