வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 13, 2025 07:41 AM

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சரணாலயம் அமைந்துள்ள இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.
இந்நிலையில், தற்போது வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதிக அளவிலான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன.
வழக்கமாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வரத் துவங்குகின்றன.
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும். மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
அந்த வகையில் தற்போது கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வண்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன. சுமார் 30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.