நெல்லுாரில் பறவை காய்ச்சல்; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நெல்லுாரில் பறவை காய்ச்சல்; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 18, 2024 04:53 AM

சென்னை: நெல்லுார் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லுார் பகுதியில் உள்ள, கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த, 10 நாட்களில், 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துஉள்ளன.
மூச்சு திணறல்
எனவே தமிழகத்தில், 'எச்5என்1' என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அம்மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிஉள்ள கடிதம்:
கோழிகள், காட்டு பறவைகள் மற்றும் அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில், பறவை காய்ச்சல் பாதிப்பு பரவும் வாய்ப்பு உள்ளது.
காய்ச்சல், தலைவலி, கை, கால் தசைபிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
முககவசம்
இவ்வகை வைரஸால் பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் மனிதர்கள் குறித்து தகவல், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருத்தல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முககவசம் கட்டாயம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.