ADDED : ஜன 18, 2024 01:14 AM

சென்னை:சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு, பொதுச்செயலர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த, 107 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோருக்கு ஊட்டினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழாவுக்கு வந்தவர்களுக்கு, கேக் வினியோகம் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி மேற்கு பகுதி 119 கிழக்கு வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பெண்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன் சென்று, மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அ.ம.மு.க., சார்பிலும், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில், சென்னை கிண்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள, சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., படத்திற்கு, அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, செய்தித்துறை செயலர் செல்வராஜ், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தமிழகம் முழுதும், அ.தி.மு.க., - அ.ம.மு.க., சார்பிலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பிலும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.