ரூ.4,000 கோடி திட்டத்தில் விதிமீறல்: சென்னை மாநகராட்சி மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ரூ.4,000 கோடி திட்டத்தில் விதிமீறல்: சென்னை மாநகராட்சி மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : நவ 22, 2025 06:18 AM

சென்னை: 'சென்னை மாநகராட்சியில், 4,000 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் செய்ய வசதியாக, விதிகளை மீறி ஒப்பந்தப்புள்ளி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனங்களிடம் கடந்த ஜூலையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 4,000 கோடி ரூபாய். ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கான கடைசி நாள், ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டது.
இறுதியாக நவ., 20ம் தேதி மாலை, 3:00 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன.
இந்நிலையில், விதிகளை மீறி மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, 21ம் தேதி கடைசி நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின், மேலும் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது.
ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பை தெரிந்து, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க சாதகமாக, இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. ஏற்கனவே, நேரம் முடிந்த ஒப்பந்த அறிவிப்பை மீண்டும் கால நீட்டிப்பு செய்வது, விதிமீறல் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படை தன்மையையும் பாதிக்கும் செயல்.
இந்த விதிமீறல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரிய மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒப்பந்த மதிப்பான, 4,000 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் செய்ய, விதிகளை மீ றி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
உடனே, சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் நெருக்கடியில் கால நீட்டிப்பு செய்தது என்பது கு றித்து, முழு விசாரணை நடத்த வேண்டும். நேரம் முடிந்த பின், ஒப்பந்தப்புள் ளி கோரிய நிறுவனம் யாருடையது; அதன் பின்னணி குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

