இருமல் மருந்து விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச மறுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
இருமல் மருந்து விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச மறுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி
ADDED : அக் 12, 2025 06:02 PM

மதுரை: காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறித்தும், அதனால் குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஏன் பேச மறுக்கிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி;
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் மருந்து கம்பெனி தயாரித்த மருந்தினால் மத்திய பிரதேசத்தில் 23 குழந்தைகள் உயிரிழந்தனர். ராஜஸ்தானில் 3 குழந்தைகள் இறந்தனர். தமிழக அரசு ஒப்புக்கு சப்பாணியாக drug Inspectors இருவரை சஸ்பெண்ட் செய்து இதன் மூலமாக தமிழக அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். நேற்றைய தினம் மருந்தை எல்லாம் கண்காணிக்கக்கூடிய அமைப்பு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
பொதுவாக மருந்து கம்பெனிகளில் பொருட்களை வாங்கும் போது பரிசோதிப்பார்கள். ஆனால் மருந்துகளை தயாரித்த பின்னர் பரிசோதிக்க மாட்டார்கள். அதனால் இந்த முறை drug controller general of India இனி இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கின்றனர். இந்த பொறுப்பை இந்திய மருந்தியல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள இந்த மருந்து கம்பெனியானது, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தரக்கட்டுப்பாட்டு விதிமீறல்களை செய்திருக்கின்றனர். ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய தமிழகத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள், மருந்து ஆய்வாளர்கள் யாரும் மருந்து நிறுவனத்திற்கு சென்று பரிசோதிக்கவில்லை.
இன்றைக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து எஸ்ஐடி விசாரணைக்குழு இங்கு விசாரணைக்காக வந்த பின்பு, யாரையும் கைது செய்து விடக்கூடாது என்பதற்காக இவர்கள் (தமிழக அரசு) 2 பேரை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர்.
ஒப்புக்கு சப்பாணி
ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது இதில் தமிழக அரசுக்கு முழு பொறுப்பு இருக்கிறது. முதல்வர் இதை பற்றி பேச வேண்டும். அவரின் கீழ் இருக்கும் ஏதோ ஒரு துறைச் செயலாளர் அதைப் பற்றி பேசுவது, ஒப்புக்கு சப்பாணியாக இருவரை சஸ்பெண்ட் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது.
கரூரில் 41 பேர் இறந்திருப்பதை பற்றி பேசுகிறோம், பேசணும். மத்திய பிரதேசத்தில் 23 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அதை ஏன் நாம் பேச மறுக்கிறோம்? எதற்கு முதல்வர், தமிழக அமைச்சர்கள் இதை மூடி மறைக்கின்றனர்? எனவே, முதல்வர் இதை பற்றி பேச வேண்டும்.
குற்றச்சாட்டு
இன்னொரு அதிர்ச்சியான விஷயத்தை இங்கே கூறுகிறேன். இந்திய மருந்தியல் ஆணையம் என்று ஒன்று உள்ளது. அவர்கள் நடத்திய பயிற்சி வகுப்புகளில் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர்கள் (Drugs Controllers) யாரும் பங்கேற்கவில்லை. இதை குற்றச்சாட்டாகவே நான் கூறுகிறேன்.
ஏதோ ஒரு மாநிலத்தில் குழந்தைகள் இறந்துவிட்டனர், அதனால் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதே மருந்தை நம்ம ஊரில் ஏதோ ஒரு இடத்தில் சாப்பிட்டு நம்ம ஊரில் நடந்திருந்தால் சும்மா இருப்போமா? இந்த துறையை தமிழக அரசு சுத்தப்படுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஏன் போகவில்லை என்பதற்கு முதல்வர் நேரிடையாக பதில் சொல்ல வேண்டும்.
திருமாவளவன் விஷயத்தை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சென்னையில் ஒரு இடத்தில் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இவர்கள்(விடுதலை சிறுத்தை கட்சியினர் திருமாவளவன் வாகனத்தின் குறுக்கே வந்தவரை அடித்த சம்பவம்) ஒரு வக்கீல் மேல் தாக்குதல் நடத்துகின்றனர்.
பாகிஸ்தான் அனுப்புங்க
திருமாவளவன் இத்தனை ஆண்டுகாலம் அரசியல் பண்ணுகிறார்… அவர் மேடையில் சொல்கிறார்… பார்த்து முறைத்தால் நாலு தட்டு தட்டணும் என்று. பாகிஸ்தான்காரன் முறைத்துக் கொண்டு இருக்கிறான், எனவே திருமாவளவனையும், அவர்கள் கூட உள்ளவர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். முறைச்சவன்களை எல்லாம் தட்டணும் என்று ஆரம்பிச்சா திருமாவளவனுக்கு தமிழகத்தில் இடம் இல்லை.
இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு போய் பாகிஸ்தான் வீரர் முறைத்தால் ரெண்டு தட்டு தட்டணும். ஏன்னா… அங்கே போய் வீரத்தை காட்ட மாட்டாங்க. அப்பாவியா யாராவது ஸ்கூட்டரில் வருவாங்க, கூட்டமாக திருமாவளவனோடு 100 பேர் வருவாங்க. தலைவர் என்றால் அவர் (திருமாவளவன்) முன்னுதாரணமாக நடந்திருக்க வேண்டும். கீழே இறங்கி தடுத்து இருக்கணும், என்ன ஆச்சு என்று கேட்டிருக்கணும்.
இது தான் தமிழகத்தின் சாபக்கேடு. இப்படிப்பட்ட தலைவர்கள் தான் இங்கு அரசியல் பண்றாங்க. ஜாதியை வைத்து, அட்டூழியத்தை வைத்து, அடக்குமுறையை வைத்து, வன்முறையை வைத்து, மக்களை மிரட்டி அரசியல் பண்றாங்க.
கமெண்ட் போட முடியாது
திருமாவளவன் எக்ஸ் வலைதளம் சென்று பார்த்தால் யாரும் கமெண்ட் பண்ண முடியாது. கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்ல உரிமையிருக்கு. ஆனால் திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் கருத்து போடுவார், ஆனால் அதற்கு கமெண்ட் போட முடியாது. அதற்கான அனுமதி இல்லை. அப்படி என்றால் அவரின் கருத்தை மட்டும் தான் நீங்க படிக்கணும். அந்த கருத்தை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ நீங்கள் கமெண்ட் பதிவிட முடியாது.
இப்படிப்பட்டவர்கள் பிரதமரை பார்த்து, பாஜவை பார்த்து கருத்து சுதந்திரம் பற்றி பேசுகின்றனர். இப்படி ஒரு வெட்கக்கேட்டை நான் பார்த்தது இல்லை. அதில் இரண்டு பேர் வேலையில்லாதவர்கள் கமிஷனர் அலுவலகம் போய் என் மீது புகார் தருகின்றனர்.
மிகவும் வருத்தம்
திருமாவளவனின் பேவரிட் என்ன என்றால், சூரியன் உதித்தால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது, சரியாக உதிக்கவில்லை என்றால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது, மழை அதிகமாகவோ, குறைவாகவோ வந்தால் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. திருமாவளவனின் அரசியல் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக மாறியிருப்பது உண்மையில் மிகவும் வருத்தமாகி இருக்கிறது.
எனவே தமிழக அரசு இதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அதில் திருமாவளவன் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தினார்களா? என்பதை பார்க்க வேண்டும். என்னையும் சேர்த்து பார்க்கட்டும். அப்படி நடத்தப்படவில்லை என்றால் திருமாவளவன் அரசியலைவிட்டு ஒதுங்கணும். இந்த அநாகரிகமான அச்சப்படுத்தக்கூடிய, வன்முறைத்தனமாக அரசியல் செய்து தப்பிப்பதற்காக ஆர்எஸ்எஸ், அண்ணாமலை, பாஜ என்று பழிபோடுவதில் இருந்து இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம்
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், அதிமுக பிரசாரக்கூட்டத்தில் தொண்டர்கள் தவெக கொடியை பறக்கவிடுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒரு கூட்டணி என்றால் ஒருமித்த கருத்தியல் இருக்கவேண்டும். அல்லது பொதுவான ஒரு சித்தாந்தம் இருக்க வேண்டும். இன்றைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒரு பொதுவாக குறிக்கோள். அதற்காக சித்தாந்தத்தை தாண்டி சேரலாம், சேரக்கூடாது என்பது எல்லாம் இல்லை. காலம் இருக்கிறது, நேரம் இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
தேர்தல் ஆணையத்தில் திருடர்கள் புகுந்துவிட்டனர் என்று ஆ ராசா கூறி இருப்பது பற்றி மற்றொரு நிருபர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அண்ணாமலை, திமுகவில் திருடர்கள் புகுந்துவிட்டனர் என்று தொடர்ந்து சொல்கிறோம். அதற்கு ஆ.ராசா ஒரு உதாரணம். அவருடைய ஊழல் ஒரு உதாரணம்.
திருடர்கள்
DMK Files நாங்க வெளியிட்டோம். டிஆர் பாலு என் மீது தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. நான் சைதை கோர்ட்டில் ஆஜராகிறேன். ஆகவே திமுக கூடாரத்தில் 40, 50 ஆண்டுகளாக நிறைய திருடர்கள் புகுந்துவிட்டனர் என்று சொல்கிறோம். ஆ ராசா தேவையில்லாமல் தேர்தல் கமிஷன் மீது கல்லெறியக்கூடாது.
குறிப்பாக, விஜய் அரசியலுக்கு வந்த பின்னர், திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் ஏதோ பிரச்னை. அவர் ரொம்ப குழம்பி போய் கிடக்கிறார். மனது ஏதோ நினைக்கிறது, வாய் ஏதோ பேசுகிறது. உடம்பு ஏதோ நினைக்குது, கை ஏதோ நடிக்குது. எனவே அவர் தியானம் செய்துவிட்டு அரசியல் பாதையை தேர்ந்து எடுத்து, மீண்டும் அரசியல் செய்யணும்.
வன்முறை அரசியல்
ஏன் இவ்வளவு கடுமையாக கூறுகிறேன் என்றால் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்து இருக்கிறார். என்னுடைய பதில் என்ன என்றால், இதை நிரூபிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு திருமாவளவன் விலகணும். எத்தனை காலத்திற்கு வன்முறையை கையில் எடுத்து அரசியல் செய்வார்கள்.
கோவையில் பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சரியான பெயர். அங்கு நாயுடு என்ற பெயர் எப்படி வந்தது என்று சிலபேர் ஆராய்ச்சி செய்கின்றனர். கோவையில் ஜிடி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ஜிடி நாயுடு என்று சொன்னால் தான் தெரியும். பின்னாடி ஜாதி பேர், புனைப்பெயர் வைக்கக் கூடாது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு திமுகவினர் மாட்டிக் கொண்டு முழிக்கின்றனர்.
நாயுடு என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, ஜிடி என்று பெயர் வைக்க முடியுமா? அதை ஜிடி நாயுடு என்றுதான் வைக்கணும். நிறைய தவறுகள் செய்யும் போது ஒருநாள் அந்த தவறுகள் தலையின் மீது விழும். இன்றைக்கு திமுக செய்த தவறுகள், அதன் தலையின் மீது விழுந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.