sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா: அண்ணாமலை

/

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா: அண்ணாமலை

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா: அண்ணாமலை

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா: அண்ணாமலை

40


ADDED : ஜன 20, 2025 06:49 PM

Google News

ADDED : ஜன 20, 2025 06:49 PM

40


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக, பரந்தூர் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதை எதிர்த்து கிராம மக்கள் 900 நாட்களை கடந்து போராடி வருகின்றனர்.

போராட்டக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் இன்று பரந்தூர் சென்றார். மண்டபத்திற்கு வெளியே கூடிய மக்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி பேசினார். ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள், விளை நிலங்களை அழித்து விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது என்றார்.

இந் நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால் மாற்று இடத்தை நடிகர் விஜய் கூறுவாரா என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி விவரம்;

நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் சென்னை மிகவும் நெருக்கடியான விமான நிலையம். 1000 ஏக்கர் பரப்பளவு மட்டுமே உள்ளது. புதுடில்லி விமான நிலையம் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஹைதராபாத் விமான நிலையம் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் பரப்பளவுக்கு அருகில் உள்ளது.பெங்களூரு விமான நிலையம் 4000 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் 2.5 கோடி. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகமாகும். கிட்டத்தட்ட 10 கோடியை எட்டலாம்.

அப்படிப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே ஒரு புதிய விமான நிலையம் என்பது மிகவும் அவசியமாகிறது. ஒரு விஷயத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நிலத்தை தேர்வு செய்ய வேண்டியது என்பது மாநில அரசின் பொறுப்பு.

க்ரீன்பீல்டு விமான நிலையம் வேண்டும் என்று 2016ல் எதிர்க்கட்சியாக தி.மு.க. இருந்தபோது, கூறி இருக்கிறது. 2019ல் ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க.,வும் இதை கூறி இருக்கிறது. பரந்தூர் நிலம் குறித்தும் சுட்டிக்காட்டி இருக்கிறது.

அதன் பின்னர் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது. விமான நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்ட 2 இடங்களில் ஒரு இடத்தை மத்திய அரசு திரும்பவும் மாநில அரசிடமே வழங்கிவிட்டது. பிறகு பரந்தூர் தான் சரியான இடமாக இருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டது. காரணம், பெங்களூரு, சென்னை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் அருகில் உள்ளது.

நிலம் தேர்வு என்பது மாநில அரசின் முடிவு என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நிலம் தேர்வில் தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. அந்த அரசியலுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை.

பரந்தூர் மக்களை சமாதானப்படுத்தி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் தி.மு.க., அரசு இறங்குமா என்ற விஷயத்துக்கு நான் போக விரும்பவில்லை. ஆனால் சென்னைக்கு புதிய விமான நிலையம் அவசியம்.

எனவே, இந்த விஷயத்தில் நடிகர் விஜய் எந்த ஆலோசனை வழங்கினாலும் அதை மாநில அரசிடம் தான் கூற வேண்டும். பரந்தூர் நிலத்தையே தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்புமா அல்லது மாற்று இடம் என்று மறு பரிசீலனை செய்யுமா? என்பதை மாநில அரசு முடிவு செய்யும்.

2014ல் மத்தியில் மோடி பிரதமராக அமர்ந்த போது, மொத்தம் 73 விமான நிலையங்களே இருந்தன. ஆனால் இப்போது, நாட்டில் 158 விமான நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் 7 முதல் 10 வரை விமான நிலையங்கள் உள்ளன. தமிழகத்துக்கு அதிக விமான நிலையங்கள் வேண்டும்.

மக்களை சந்திக்கும் நடிகர் விஜய் போன்ற புதிய அரசியல் தலைவர்கள் இதை எல்லாம் மனதில் கொள்ள வேண்டும் அல்லது மாற்று இடம் எங்கே என்பதை அவர் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு அரசியல்வாதி சாதாரணமாக சென்று வேண்டாம் என்று எதையும் சொல்லி ஒதுக்கிவிட முடியாது.

நடிகர் விஜய் போன்றவர்கள் வேறு ஏதேனும் மாற்று இடம் இருக்கிறதா? என்பதை தெரிந்து வைத்துள்ளனரா? மாநில அரசு அதை பரிசீலனை செய்யுமா? அதன் பின்னர் அதை பற்றி நாம் விமர்சிக்கலாம்.

தமிழகம் வளரவேண்டும். தமிழகத்தில் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதே பா.ஜ.,வின் தெளிவான நிலைப்பாடு. நிலம் கையகப்படுத்துதல் என்பது மாநில அரசின் கீழ் வரும் விஷயமாகும்.

அரசியலுக்கு வரும் எவரும் மத்திய, மாநில அரசுகள் எப்படி இயங்குகின்றன, செயல்படுகின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மத்தியில் இருக்கும் எந்த அரசாங்கமும் ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு இங்கேதான் விமான நிலையம் வரப்போகிறது என்று கூறிவிட முடியாது.

மாநில அரசுகள் நிலத்துக்கான பரிந்துரையை தரவேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது பரந்தூர் நிலத்தையும் ஒரு இடமாக பரிந்துரைத்து இருந்தது. அந்த பரிந்துரைகளில் மாநில அரசின் பங்களிப்பும் உள்ளது. இறுதிக்கட்டமாக தான் பரந்தூர் தேர்வானது.

மாநில அரசின் பரிந்துரையைத் தான் மத்திய அரசு தேர்வு செய்யும். இப்போது பரந்தூர் பிரச்னைக்கு நடிகர் விஜய் தீர்வு காண வேண்டும் என்று விரும்பினால், அதற்கான மாற்று என்ன என்பதை அவர் கூற வேண்டும். பரந்தூர் மக்களுக்காக நாங்களும் இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மக்களின் கோரிக்கை நியாயமானது என்பதை நாங்கள் பலமுறை கூறிவிட்டோம்.

தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும். வெகு சாதாரணமாக மத்திய அரசு மீது பழிபோடுவது என்பது நல்ல அரசியலுக்கு அழகல்ல. அரசியல் முதிர்ச்சியும் அல்ல என்று நான் கூறுவேன்.

இவ்வாறு அண்ணாமலை பேட்டி அளித்தார்.






      Dinamalar
      Follow us