ADDED : அக் 07, 2025 07:38 AM

சென்னை : இந்திய பொருட்களையே வாங்குமாறு வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகிகளுக்கு, தமிழக பா.ஜ., உத்தரவிட்டு உள்ளது.
பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தற்சார்பு இந்தியாவை உருவாக, சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி ஆடை, உணவு பொருள், 'எலக்ட்ரானிக்ஸ்' சாதனங்கள் என பல பொருட்களை நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
அவற்றை, மக்கள் அதிக அளவில் வாங்கும்போது, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; உள்ளூர் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அதிகரிக்கும். எனவே, 'ஒவ்வொரு வீட்டிலும் சுதேசி; வீட்டுக்கு வீடு சுதேசி' என விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும், இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, சுதேசி பொருள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.