வழக்கம்போல 'ஸ்டிக்கர்' ஒட்ட முண்டியடிப்பது வெட்கக்கேடு தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்
வழக்கம்போல 'ஸ்டிக்கர்' ஒட்ட முண்டியடிப்பது வெட்கக்கேடு தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : அக் 30, 2025 07:59 AM

சென்னை: தமிழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் சாதன உதிரிபாகங்களில் முதலீடு செய்யும் ஐந்து திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் ராஜா வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய அரசு அனுமதி அளித்ததில், ஏழு திட்டங்களில், ஐந்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என தெரிவித்திருந்தார். இதை விமர்சித்து, தமிழக பா.ஜ., வெளியிட்ட அறிக்கை:
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ், 5,532 கோடி ரூபாய் முதலீட்டில், ஏழு திட்டங்களில், ஐந்தை தமிழகத்திற்கு, மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் பிரதமர் மோடி.
ஆனால், சொந்த வாரிசுகளை தவிர, வேறு யாரை பற்றியும் கவலைப்படாத விளம்பர மாடல் அரசு, வழக்கம் போல், இதிலும் 'ஸ்டிக்கர்' ஒட்ட முண்டியடிப்பது வெட்கக்கேடானது.
பாக்ஸ்கான் நிறுவனம், கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்போவதாக கூறிய உருட்டுகள் அம்பலப்பட்டு விட்டன. ஆந்திர முதல்வர் இருந்த இடத்தில் இருந்தே, 'கூகுள்' நிறுவனத்தை கொக்கி போட்டு துாக்கி விட்டார்.
இதில் எல்லாம், மனமுடைந்து போய், எப்படியாவது மக்கள் மத்தியில், நாமும் நற்பெயரை சம்பாதிக்க வேண்டும் என, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், மத்திய அரசு கொடுத்த திட்டங்களுக்கு, தி.மு.க., அரசு உரிமை கொண்டாடப் பார்க்கிறது. எதற்கு இந்த பிழைப்பு. உங்கள் முதலீட்டு நாடகங்கள் எதுவும் இனி தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

