பா.ஜ., அம்பலப்படுத்திய பி.ஜி.ஆர்., ஊழல் அண்ணாமலை ஆவேசம்
பா.ஜ., அம்பலப்படுத்திய பி.ஜி.ஆர்., ஊழல் அண்ணாமலை ஆவேசம்
ADDED : மார் 10, 2024 12:37 AM
சென்னை:'பா.ஜ., அம்பலப்படுத்திய, தி.மு.க.,வின் பி.ஜி.ஆர்., ஊழல் தற்போது நிரூபணமாகி இருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்திற்கான ஒப்பந்தம், 2019ல், பி.ஜி.ஆர்., எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு, 4,472 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மின் வாரியம், 2021 ஏப்ரலில் கடிதம் அனுப்பியது. அந்த ஆண்டு ஆகஸ்டில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான உயர்மட்ட குழு, பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்க உத்தரவிட்டது.
அக்டோபரில், கோபாலபுர குடும்பம், பி.ஜி.ஆர்., நிறுவனம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் தொடர்பை தமிழக பா.ஜ., அம்பலப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், பி.ஜி.ஆருக்கு மின் வாரியம் அனுப்பிய கடிதத்தை, தமிழக பா.ஜ., வெளியிட்டது. அதில் ஒப்பந்தத்தை புதுப்பித்து, 15 மாதங்களுக்கு பின் திட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தாண்டு ஜனவரியில் பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மின் வாரியம் ஒப்பந்தம், சத்தமே இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
கடனில் மூழ்கி இருந்த பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு உயிர்கொடுக்க கோபாலபுரம் குடும்பம் செய்த முயற்சி, செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் தோல்வியுற்றது.
கடந்த பிப்., 5ல், ஒப்பந்தப்படி பணியை துவங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தினால், பி.ஜி.ஆர்., வழங்கிய, 128 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை வேறு வழியின்றி மின் வாரியம் கையகப்படுத்தியுள்ளது.
பா.ஜ., அம்பலப்படுத்திய தி.மு.க.,வின் பி.ஜி.ஆர்., ஊழல் தற்போது நிரூபணமாகி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் மற்றொரு அறிக்கை:
மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம் தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளை கண்டறிந்து, மத்திய அரசின் நிதியை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது. இது கூட தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது.
இரு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு, வீடு கட்ட நிதியும், இடமும் வழங்காமல் அலைக்கழித்து இருப்பது என்பது, தி.மு.க., அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு.
மாவட்ட கலெக்டரிடம் கேட்ட பின், வீடு கட்ட வெறும் 1 சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து, பல முறை முறையிட்ட பின்பும், எந்த தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார் சின்னப்பிள்ளை. அவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல், 'ஸ்டிக்கர்' ஒட்ட புறப்பட்டு இருக்கிறார் ஸ்டாலின்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

