எங்களுக்கு பா.ஜ., எதிரி அல்ல: சொல்கிறார் காதர் மொய்தீன்
எங்களுக்கு பா.ஜ., எதிரி அல்ல: சொல்கிறார் காதர் மொய்தீன்
ADDED : டிச 15, 2025 04:53 AM

தஞ்சாவூர் : “பா.ஜ., உள்ளிட்ட யாரும் எங்களுக்கு எதிரி அல்ல,” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம், ஒட்டு மொத்தமாக தி.மு.க.,வுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கும். எங்கள் அமைப்பு சார்பில், கும்பகோணத்தில் வரும் ஜன., 28ல் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இந்த மாநாடு பா.ஜ.,வுக்கு எதிரானது அல்ல.
பா.ஜ., உள்ளிட்ட யாருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் எதிரானவர்கள் அல்ல. எங்கள் மனதில் உள்ள சைத்தானைத் தவிர வேறு யாரையும் நாங்கள் எதிரியாக நினைத்தது கிடையாது. இன்றைக்கு எதிரியாக நினைப்பவர்கள், நாளைக்கு நண்பர்களாக மாறுவர். இது அரசியலில் மிகச் சிறந்த பாடம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கும், முஸ்லிம் ஓட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? அங்குள்ள ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாகத்தான் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் எந்த அரசியலும் கிடையாது.
தி.மு.க., கூட்டணியில் இம்முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்தும்போது இதை நிச்சயம் தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

