சபாஷ்... சரியான கேள்வி; அ.தி.மு.க.,வை பாராட்டிய அண்ணாமலை
சபாஷ்... சரியான கேள்வி; அ.தி.மு.க.,வை பாராட்டிய அண்ணாமலை
ADDED : டிச 29, 2024 10:02 PM

சென்னை: அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும், மாணவி அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.
தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு, செல்போனில் யாரோ ஒருவருடன் 'சார்' எனக் கூறியபடி ஞானசேகரன் பேசியதாக கூறியிருந்தார். இது இந்த வழக்கை வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்றது. அப்படி எனில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர் கதையாக அரங்கேறி வருகிறதா? ஞானசேகரனுடன் பேசியவர் யார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்டனம் தெரிவித்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் சாட்டையால் அடித்து நூதன போராட்டம் நடத்தினார். மேலும், அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, இன்று அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, 'யார் அந்த சார்' என்ற பதாகைகளை ஏந்தியபடி சென்னை இ.ஏ., மால் வளாகத்தில் அ.தி.மு.க.,வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மாலில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க.,வினரின் இந்த போராட்டத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'ஒரு சாமானியனைப் பாதிக்கும் எந்தவொரு பிரச்னையிலும் அரசியல் இருக்காது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை பிரச்னையை கையில் எடுத்து, முக்கியமான கேள்வி எழுப்பிய அ.தி.மு.க., ஐடி விங்கை பாராட்டுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.