நடிகர் ரஜினியை சந்தித்த பா.ஜ., நயினார் நாகேந்திரன்
நடிகர் ரஜினியை சந்தித்த பா.ஜ., நயினார் நாகேந்திரன்
ADDED : ஜூன் 17, 2026 06:37 AM

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தை தொடங்கினார். அதை அறிவித்தபோது, தன் இயக்கத்தில் இணையுமாறு நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார்.
இதனால், அண்ணாமலை இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், 'ரஜினியின் பெயர், படத்தை, எந்த கட்சியும் எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது' என, ரஜினி தலைமை ரசிகர் நற்பணி மன்றம் அறிவித்தது.
இதனிடையே, தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்கான முன்னெடுப்புகள் குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன், கடந்த வாரம் டில்லியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர், நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்தனர்.
அப்போது, பிரதமர் மோடியின், 12 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்ற பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நுால்களை, ரஜினிக்கு வழங்கினர்.
அமித் ஷா ஆலோசனைப்படி, பா.ஜ.,வுக்கு ரஜினியின் ஆதரவை பெறவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானது. ஆனால், 'இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது' என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
