விவசாயிகளை வஞ்சிக்கிறது, ஒன்றுமே செய்யவில்லை தமிழக அரசு; நயினார் நாகேந்திரன்
விவசாயிகளை வஞ்சிக்கிறது, ஒன்றுமே செய்யவில்லை தமிழக அரசு; நயினார் நாகேந்திரன்
ADDED : நவ 22, 2025 08:11 PM

சென்னை: விவசாயிகளுக்கு மானியம் என்று எதுவுமே கொடுக்காமல் தமிழக அரசு வஞ்சிக்கிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி;
நான்கு வருஷத்தில் மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதில் தமிழக அரசு வீணடித்துள்ளது. கஞ்சா, போதைபொருள், சொத்துவரி உயர்வு, மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு என்று எதுவுமே செய்யவில்லை.
உதயநிதியை முதல்வராக்க கூட்டணி என்ற பலத்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருக்கின்றனர். எஸ்ஐஆர் என்ன என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது. இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், 18 வயது அடைந்தவர்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். இதில் என்ன வருத்தம் இருக்கிறது என்பது தான் எங்களுக்கு தெரியவில்லை.
குறுவை நெல் சாகுபடிக்கு 120 நாள். இந்த நாள் முடிந்தவுடன் கொள்முதல் பண்ணவேண்டியது யார் பொறுப்பு. இது தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு.
நெல் கொள்முதலுக்கு தமிழக அரசு எங்கேனும் சேமிப்பு கிடங்குகள் வைத்துள்ளதா? ஆனால் 6 இடங்களில் மத்திய அரசு அதற்கான கிடங்குகளை வைத்துள்ளது.
அறுவடை முடிந்தவுடன் ஏன் கொள்முதல் செய்யவில்லை என்பது எங்களின் கேள்வி. மழையில் பயிர்களை நனையவிட்டு, அதை முளைக்கவிட்டு, ஈரப்பதம் ஆகவிட்டது, அதற்கு ரூபாய் தாருங்கள் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது?
பிரதமர் வந்தார், 18000 கோடி ரூபாய் கொடுத்தார். வருஷத்துக்கு ரூ.6000 கோடி. உண்மையில் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது யார்? மத்திய அரசு தான். நீங்கள்(தமிழக அரசு) ஏதாவது மானியம் கொடுக்கிறீர்களா? எதுவும் கொடுப்பதில்லை, விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கிறது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

