UPDATED : அக் 10, 2026 08:31 PM
ADDED : அக் 10, 2026 07:36 PM
சென்னை: காங்கிரஸ் எம்.பி.,யை கண்டித்து, பா.ஜ., மகளிர் அணியினர், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் காங்., – எம்.பி., அகோஜம் பிமோல், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு, பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக பா.ஜ., சார்பில், மகளிர் அணி முன்னாள் தலைவர் வானதி தலைமையில், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.பி., மீது நடவடிக்கை எடுக்காத, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கண்டித்து கோஷம் எழுப்பினர். தடையை மீறி போராட்டம் நடத்திய, பா.ஜ., மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, வானதி கூறுகையில், “ஆணாதிக்கத்தை எதிர்த்து இளம் பெண்கள் போராட வேண்டுமென ராகுல் கூறி வருகிறார். ஆனால், தன் கட்சி எம்.பி., ஒருவர், பாலியல் புகாரில், பல்கலை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து, எதுவும் பேசவில்லை. இந்த விவகாரத்தில், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.
