காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு
காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு
ADDED : டிச 19, 2025 09:16 AM

சென்னை: மஹாத்மா காந்தி பெயர் மாற்றம் என்பது தவறு. பெயரை நீக்கி விட்டார்கள் என்ற தவறான பிரசாரத்தை எதிர்க்கட்சியினர் செய்கின்றனர் என தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, 'விபி ஜி ராம் ஜி' மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. மஹாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெ ளியிட்ட அறிக்கை: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 2005 ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் துவங்கப்பட்டது.
பழையன கழிந்து...!
கிராமப்புற குடும்பங்களில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், வறுமையைக் குறைத்தல், இயற்கை வளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்று 2009ல் தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 20 வருடங்களுக்கு மேலான இந்த திட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் கிராமப்புற வாழ்வாதார பணி சட்டம் 2025 என்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. பழையன கழிந்து புதியன புகுத்தும் இந்த திட்டத்திற்கென புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியள்ளது மத்திய அரசு.
தவறேதும் இல்லை
இந்த திட்டத்தின் பெயரை மாற்றியமைப்பது இந்த சட்டத்தின் நோக்கமல்ல, ஆனால், இன்றைய கால சூழ்நிலைக்கு திட்டத்தை மாற்றுவது காலத்தின் கட்டாயம். புதிய திட்டத்திற்கு புதிய பெயர் வைப்பதில் தவறேதும் இல்லை. 2014ல் மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 33,000 கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 86,000 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய சட்டத்தின் மூலம் அமலாகும் இந்த திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு ரூபாய்.1,51,852 கோடி ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூபாய். 95,692 ரூபாய். (60%). அதாவது பத்தே ஆண்டுகளில் 33,000 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின் நிதி ரூபாய். 1,51,852 கோடியாக ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
ரூ.84 லட்சம் கோடி
தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்து விட்டதாக சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் 10 வருடங்களில் மத்திய அரசு திட்டங்களுக்கு 22 லட்சம் கோடி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 வருடங்களில் பாஜ ஆட்சியில் ரூ.84 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் கீழ், நூறு நாட்களாக இருந்த வேலைவாய்ப்பு நூற்று இருபத்தைந்து நாட்களாக உயர்த்தப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல்
பல்வேறு முறைகேடுகளை கொண்டிருந்த பழைய திட்டத்தில் இருந்த ஒட்டைகள் அடைக்கப்பட்டு, முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாகி, முறைகேடுகளில்லாமல், தகுதியான பயனாளிகள் மட்டுமே பயன் பெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது புதிய திட்டம். மேலும், பெண்கள், வயதானவர்கள், மாற்று முக்கியத்துவம் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வழி வகை செய்கிறது.
காழ்ப்புணர்ச்சி
இதன் பயன்கள் மக்களை அடைந்து விடுமோ என்கிற காழ்ப்புணர்ச்சியில், அச்சத்தில், மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டார்கள் என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டு உண்மையை மறைக்க முயல்கின்றனர் எதிர்க்கட்சியினர். நவீன இந்தியாவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை படைக்க மக்கள் தயார், எதிர்கட்சிகளின் உள்நோக்கத்தை மக்கள் முறியடிப்பார்கள். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

