மதம் மாறினால் இட ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு பா.ஜ., வரவேற்பு
மதம் மாறினால் இட ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு பா.ஜ., வரவேற்பு
ADDED : டிச 04, 2025 05:37 AM

சென்னை: 'மதம் மாறியவர்கள், போலி ஆவணங்கள் அடிப்படையில், சலுகைகளை பெறுவது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், எஸ்.சி., இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இது, வரவேற்கத்தக்கது. மேலும், மதம் மாறிய பின்பும், இட ஒதுக்கீட்டு சலுகைகளை, தொடர்ந்து பெறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உ.பி., அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜாதி பாகுபாடு இருப்பதால் தான், இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கிறிஸ்தவத்தில் ஜாதி பாகுபாடு இல்லை என்பதால், அரசியலமைப்பின்படி ஹிந்து, சீக்கியம், அல்லது பவுத்த மதத்தை தவிர, வேறு மதத்தை பின்பற்றுவோர், எஸ்.சி., பிரிவினராக கருதப்பட மாட்டார்கள்.
ஆகையால், ஒருவர் மதம் மாறியதும், பட்டியலின அந்தஸ்து தானாக ரத்தாகி விடும். மதம் மாறியவர்கள் பட்டியலின சலுகைகளை பெறுவதை தடுக்க, நான்கு மாதங்களுக்குள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி., அரசின் அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இந்த நிலை அதிகம் உள்ளது. சலுகைகளுக்காக மதம் மாறியவர்கள், போலி ஆவணங்களின் அடிப்படையில், சலுகைகளை பெற்று வருவது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

