கவர்னரை விமர்சித்தால் பா.ஜ., வேடிக்கை பார்க்காது: நாகேந்திரன்
கவர்னரை விமர்சித்தால் பா.ஜ., வேடிக்கை பார்க்காது: நாகேந்திரன்
ADDED : அக் 12, 2025 02:11 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை:
தமிழக கவர்னர் ரவியை, துணை முதல்வர் உதயநிதி தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். இது கண்டனத்திற்கு உரியது. தான் வகிக்கும் பதவிக்கு உரிய பொறுப்பின் மீது, துளியும் அக்கறை இல்லாத உதயநிதிக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி, அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள தேசியவாதியான கவர்னரை அடிப்படையின்றி விமர்சிக்க, என்ன தகுதி இருக்கிறது?
தி.மு.க., மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தை திசை திருப்ப ஹிந்தி திணிப்பு, மதவாதம் என்று, வாய்க்கு வந்ததை கூறும் முன், தேசிய கல்வி கொள்கையில், 'ஹிந்தி கட்டாயம்' என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என, தி.மு.க.,வால் காட்ட முடியுமா?
ஹிந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என, சத்தியம் செய்ய முடியுமா?
கவர்னரால் பதவி பிர மாணம் செய்து வைக்கப்பட்ட உதயநிதி, முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பை புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட கவர்னர் மீது, இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால், தமிழக பா.ஜ., வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என, எச்சரிக்கிறேன்.
மேலும், தி.மு.க.,வின் நிர்வாக சீர்கேடால் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு, ஊழல், முறைகேடு, பெருகும் போதைப்புழக்கம் ஆகியவற்றை எதிர்த்து தான், தமிழகம் போராட வேண்டும். கூடிய விரைவில், அந்த போராட்டத்தில் தமிழகம் வெல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.