தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ., பகல் கனவு பலிக்காது; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
தி.மு.க., இருக்கும் வரை பா.ஜ., பகல் கனவு பலிக்காது; முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
ADDED : அக் 29, 2025 05:05 AM

சென்னை: ''தி.மு.க., இந்த மண்ணில் இருக்கும் வரை, பா.ஜ.,வின் பகல் கனவு பலிக்காது. வரும் சட்டசபை தேர்தல், தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற தி.மு.க., ஆட்சியா அல்லது டில்லிக்கு வளைந்து கொடுக்கிற அடிமைகளின் ஆட்சியா என்பதை தீர்மானிக்கும் தேர்தல்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மாமல்லபுரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'என் ஓட்டுச்சாவடி; என்ற பெயரில் தி.மு.க., சார்பில் வெற்றி ஓட்டுச்சாவடி' பயிற்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 2,500 நிர்வாகிகள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நம்முடைய தொடர் வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2026 தேர்தலிலும் நாம் வெற்றி பெறப் போகிறோம்.
அன்றைக்கு தலைப்பு செய்தி, 'திராவிட மாடல் 2.0 ஆட்சி துவங்கியது' என்பது தான். இதை ஆணவத்தில் சொல்லவில்லை. நிர்வாகிகள், தொண்டர்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனைகள், தமிழக மக்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்.
தி.மு.க., அரசின் திட்டங்களும்,- சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும், தொழில் துறையில் மிகப் பெரிய பாய்ச்சலையும், கல்வித் துறையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால், தி.மு.க., இந்த மண்ணில் இருக்கும் வரை, பா.ஜ.,வின் பகல் கனவு பலிக்காது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தமிழகத்தை அ.தி.மு.க., கூட்டத்திடம் இருந்து மீட்டோம்.
தமிழகத்தை பா.ஜ., - அ.தி.மு.க., கும்பலிடமிருந்து பாதுகாப்பதற்கான தேர்தலாக வரும் 2026 சட்டசபைத் தேர்தல் இருக்கும். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற தி.மு.க., ஆட்சியா; டில்லிக்கு வளைந்து கொடுக்கிற அடிமைகளின் ஆட்சியா என, தீர்மானிக்கிற தேர்தல்.
தமிழகத்தை கபளீகரம் செய்து, நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்த கட்சியை, அமித் ஷாவிடம் விழுந்து, சரண்டர் செய்து விட்டார்.
அந்த கூட்டணியை, தமிழக மக்களும் விரும்பவில்லை. அவர்கள் கட்சியினரும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும், அந்த கூட்டணிக்கு செல்லவில்லை.
வி.சி.க.,வினர் வருகின்றனர்; கம்யூனிஸ்ட்டுகள் வருகின்றனர்; காங்கிரசார் வருகின்றனர் என, அவரும் தினமும் சொல்லி பார்த்தார். ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை.
மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை. தமிழகத்திற்கு எதிராக, கூட்டணி அமைத்திருக்கும், அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்து சொல்லி, அவர்களின் நம்பிக்கையை பெற்று, அதை தி.மு.க., கூட்டணிக்கான ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
'எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க'
கட்சி நிர்வாகிகளுக்கு பலே விருந்து
சட்டசபை தேர்தலையொட்டி, கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், என்றும் இல்லாத அளவிற்கு, மிகப் பிரமாண்டமாக தி.மு.க., தலைமையால் விருந்து படைக்கப்பட்டுள்ளது. தலை வாழை இலை போட்டு விருந்து பரிமாறி உள்ளனர். அசைவ உணவில், மட்டன் பிரியாணி, சிக்கன் கபாப், பிரட் அல்வா, தயிர் பச்சடி, கத்திரிக்காய் தொக்கு, இறால் தொக்கு, நண்டு தொக்கு, வஞ்சிரம் வறுவல் என, முரட்டு விருந்து வழங்கப்பட்டுள்ளது. சைவ உணவில், சாதம், சாம்பார், தஞ்சாவூர் வத்தல் குழம்பு, மிளகு ரசம், தயிர், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, காயின் பரோட்டா, முந்திரி பக்கோடா, மலபார் அவியல், பட்டாணி வருவல், உருளைக்கிழங்கு, வேர்க்கடலை முந்திரி சாப்ஸ், கத்திரிக்காய் மூக்கடலை, மால் புவா ஸ்வீட், ரோல் ரசமலாய், மலாய் கோவா ஸ்வீட் ஆகியவை பரிமாறப்பட்டன. ஒவ்வொரு நிர்வாகியிடமும், 'யார் யார் எவ்வளவு வேண்டுமோ, அந்த அளவுக்கு விருந்தில் சாப்பிடலாம்; இது நம்ம வீட்டு நிகழ்ச்சி. கூச்சமில்லாமல் சாப்பிட வேண்டும்' என சொல்லி, அவர்களை விருந்து நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

