ADDED : அக் 02, 2025 01:46 AM

சென்னை: 'பா.ஜ.,வின் கருவியாக, விஜய் செயல்படுகிறார்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது, ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும். இந்த சம்பவத்தில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே, பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுத்தன. ஆனால், விஜய், காணொலி வழியே வெளியிட்ட பதிவில், முதல்வர் மீது பழி சுமத்தும் வகையில் பேசியிருப்பது, அவரது அரசியல் நேர்மையை, கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
நடந்த பெருந்துயரத்துக்காக, அவர் வருந்துவதாக தெரியவில்லை. இந்த உயிரிழப்புகளை வைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக கொண்டிருக்கிறார். இந்தச் சம்பவம், வெளிப்புறத்தில் இருந்து யாரோ துாண்டி விட்டதால் அரங்கேறியது என்ற, தவறான கருத்தை உருவாக்கி, பாதிப்படைந்த மக்களை, மீண்டும் ஒரு மாயைக்குள் வீழ்த்திட, விஜய் தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
இதிலிருந்து, விஜய்க்கு தவறான வழிகாட்டுதலையும், தி.மு.க.,வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை போதிப்பதையும், துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில், விஜய் சிக்கியுள்ளார் என்றே உணர முடிகிறது. விஜய், பா.ஜ.,வின் கருவி தான். தமிழக மக்கள் இந்த சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வடமாநிலங்களில் காட்டிய, அரசியல் சூழச்சி போன்ற கைவரிசையை, தமிழகத்திலும் செய்து காட்ட முயற்சிக்கும், சங்பரிவாரிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் அரசியல் சதிகளை முறியடிக்க, அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் திருமா கூறியுள்ளார்.