மாணவியரின் கருப்பு துப்பட்டா பறிமுதல்; முதல்வர் விழாவில் அதிர்ச்சி: பா.ஜ., கண்டனம்!
மாணவியரின் கருப்பு துப்பட்டா பறிமுதல்; முதல்வர் விழாவில் அதிர்ச்சி: பா.ஜ., கண்டனம்!
ADDED : ஜன 05, 2025 04:04 PM

சென்னை; முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் அணிந்திருந்த கருப்பு நிற துப்பட்டாவுக்கு போலீசார் அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சிந்துவெளி புதிருக்கு உரிய விடையை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வரும் நபர்கள், அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் உத்தேசமாக 8.57 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த, வைத்திருந்த கருப்பு நிற பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர்.
மேலும், கருப்பு நிறம் கொண்ட பைகள், குடைகள் போன்றவற்றையும் விழா நுழைவு வாயிலேயே சோதனை செய்து பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின்னரே கருப்பு நிற பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்ட பல தருணங்களில் கருப்பு நிறம் மூலம் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தவர் முதல்வர் ஸ்டாலின். இப்போது அவரது நிகழ்ச்சியிலே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பிலோ அல்லது காவல்துறையின் தரப்பிலோ இருந்து எவ்வித விளக்கமும் வெளியிடப்படவில்லை. இந் நிலையில் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.,மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களை அவர் சந்தித்த போது கருப்பு துப்பட்டா வாங்கி வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழிசை கூறியதாவது; கருப்பு நிற துப்பட்டாவை கருப்பு நிற கொடி என்று நினைக்கிறார்களோ என்னவோ? கருப்பை பார்த்து ஸ்டாலின் பயப்பட ஆரம்பித்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை.
அரண்டவர் கண்களுக்கு தெரிவது எல்லாம் பேய் என்பது மாதிரி, கருப்பாக இருந்தால் ஒருவேளை கருப்புக் கொடி காட்ட வருகிறார்களோ என்று நினைத்திருக்கலாம். ஆட்சி அவ்வளவு தவறுகள் செய்கிறது. ஆகையால் துப்பட்டாவை எடுத்துக் காட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.
அண்ணா பல்கலை விவகாரத்தில் உண்மையான விசாரணை நடக்கிறது என்பதை காவல்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். உயர்கல்வி அமைச்சர் ஒரு கருத்து சொல்கிறார், போலீஸ் கமிஷனர் ஒரு கருத்தை சொல்கிறார், இதனால் தான் மக்களுக்கு குழப்பம் வருகிறது.
நீங்கள்(தி.மு.க.) எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்னவெல்லாம் செய்தீர்கள்? என்ன விதமான ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் செய்தீர்கள்? அப்போது உங்களுக்கு பேச உரிமை இருந்தது. இப்போது மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோவுடன் எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி உள்ளதாவது;முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அணிந்த மாணவிகள் மண்டபத்தில் நுழையும் முன் அவற்றை அகற்றிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு அச்சம் சூழ்ந்து விட்டது. என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி நம்பிக்கை இழந்துள்ளனர். இது என்ன விதமான எதேச்சதிகாரம்? இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.