செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'
செல்வப்பெருந்தகை வெற்று அறிவிப்பு; அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் ரத்து என 'கெத்து'
ADDED : பிப் 07, 2025 01:30 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தலையீட்டால் பிரச்னை ஓய்ந்த நிலையில் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்த 'மதநல்லிணக்க வழிபாட்டிற்கு' அனுமதி கிடையாது என காங்கிரசாருக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் பேட்டியளித்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை 'திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்க வழிபாடு பிப்.,7 ல் நடத்தப்படும். அனைத்து கட்சியினரும் பங்கேற்பர்' என அறிவித்தார். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதிய போலீசார், உடனடியாக உள்ளூர் காங்., நிர்வாகிகளை தொடர்பு கொண்டனர். 'டிவி பார்த்துதான் நாங்களே தெரிந்துகொண்டோம்' என தெரிவித்துள்ளனர்.
வழிபாடு நடத்த முறைப்படி அனுமதி கேட்டு காங்., சார்பில் நேற்றுமுன்தினம் இரவு வரை மனு அளிக்காததால், செல்வப்பெருந்தகை தரப்பை மதுரை போலீசார் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். சரிவர பதில் சொல்லவில்லை.
இதனால் மீண்டும் உள்ளூர் நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போலீசார், 'தனித்தனியாக வந்து தரிசனம் செய்ய தடை இல்லை. கூட்டமாக வந்தால் கைது நிச்சயம்; இதை மேலிடத்தில் சொல்லி விடுங்கள்' என எச்சரித்தனர்.
இப்படிதான் நடக்கும் என முன்கூட்டியே கணித்த செல்வப்பெருந்தகை, மதுரை வருவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. விமானம் மற்றும் ரயில் வாயிலாக மதுரை வருவாரா என விசாரித்த போலீசார், எங்கும் அவர் பெயர் இல்லை என்றதும், செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெற்று அறிவிப்பு என முடிவெடுத்து, வேறு பணிகளுக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து, போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்காத காங்கிரஸ் தரப்பு, போலீசார் அனுமதி தராததால் 'மதநல்லிணக்க வழிபாடு' ரத்து என 'கெத்தாக' அறிவித்துள்ளனர்.