உள்ளாட்சிகளில் 'பிளீச்சிங் பவுடர்' தட்டுப்பாடு: மழை பாதிப்பால் நோய் பரவும் அபாயம்
உள்ளாட்சிகளில் 'பிளீச்சிங் பவுடர்' தட்டுப்பாடு: மழை பாதிப்பால் நோய் பரவும் அபாயம்
ADDED : டிச 08, 2025 02:16 AM
சென்னை:உள்ளாட்சி அமைப்புகளில், 'பிளீச்சிங் பவுடர்' தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மழை பாதித்த மாவட்டங்களில், தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில், 12,525 ஊராட்சிகள், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில், 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், ஜனவரியில் முடிந்தது. இந்த உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது.
பரவும்
இவர்கள் வாயிலாக, உள்ளாட்சிகளின் துப்புரவு, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. உள்ளாட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கினால், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, அதன் வாயிலாக, மலேரியா, டெங்கு, காலரா உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் பரவும்.
எனவே, உள்ளாட்சி அமைப்புகளில், மழைக்கு பின், 'பிளீச்சிங் பவுடர்' துாவுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த வாரம், தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில், கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
இதனால், குடியிருப்பு பகுதிகள், சாலை ஓரங்கள், தாழ்வான இடங்களில், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை வெளியேற்ற வடிகால் வசதி இல்லை.
தேங்கியுள்ள மழைநீரில், கொசுக்கள், விஷபூச்சிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரித்தால், தொற்று நோய்கள் பரவும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிளீச்சிங் பவுடர் துாவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் மட்டுமே, தொற்றுநோய் பாதிப்பை தடுக்க முடியும்.
ஆனால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 'பிளீச்சிங் பவுடர்' கைவசம் இல்லை. இதனால், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டவில்லை
இது குறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்த போது, ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பிலும், 'பிளீச்சிங் பவுடர்' கொள்முதல் செய்யப்பட்டு ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும். தற்போது, தனி அலுவலர்கள் பதவியில் உள்ளதால், மாவட்ட ஊராட்சிகளில் அவை கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அங்கு கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மழை காலங்களில் பிளீச்சிங் பவுடரை பாதுகாத் து வைப்பது சிரமம். லேசான மழைநீர் மூட்டை மீது பட்டாலே, கெட்டியாகி விடும். வீணாகி விட் டதாக புகார் எழும்.
எனவே, தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால், மாவட்ட அதிகாரிகள் கொள்முதலில் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

