UPDATED : டிச 29, 2024 02:24 PM
ADDED : டிச 28, 2024 11:43 PM

வானுார்: புதுச்சேரி அருகே நேற்று நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், மேடையிலேயே அக்கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே, நேரடியாக நடந்த காரசார பேச்சு மோதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் இன்று (டிச.,29) தந்தையுடன் அன்புமணி சமரசம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், நிருபர்கள் சந்திப்பில் அன்புமணி தெரிவித்தார்.
புதுச்சேரி அருகே பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று பா.ம.க., சார்பில், '2024க்கு விடை கொடுப்போம்; 2025ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய அன்புமணி, ''கட்சிக்கு நல்ல நிர்வாகிகள் தேவை. கட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது,'' என குறிப்பிட்டு, அமர்ந்தார்.
அதன் பிறகு பேசிய ராமதாஸ், ''கட்சித் தலைவர் அன்புமணிக்கு, 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தனை அறிவிக்கிறேன். இன்றிலிருந்து அவர் பொறுப்பேற்று, அன்புமணிக்கு உதவியாக இருப்பார்,'' என்றார்.
இதைக்கேட்டு, 'யார் எனக்கா?' என்று ஆவேசப்பட்ட அன்புமணி, மைக்கை கையில் எடுத்து, ''அவன் கட்சிக்கு வந்தே நான்கு மாதமே ஆகிறது. அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? நல்ல அனுபவசாலியாக நியமியுங்கள். நல்ல திறமைசாலி தேவை என்று கூறுகிறேன். வந்தவுடனே இளைஞர் சங்கத்தில் போடுகிறீர்களே...'' என்றார்.
![]() |
அதை தொடர்ந்து ராமதாஸ், ''நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். புரிகிறதா... யாராக இருந்தாலும், நான் சொல்வதை கேட்கவில்லை என்றால், யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. நான் உருவாக்கிய கட்சி இது,'' என்று அழுத்தமாக இரண்டு முறை கூறினார்.
அதற்கு, அன்புமணி முணுமுணுத்தபடி, ''அது சரி,'' என்றார். கோபமடைந்த ராமதாஸ், ''என்ன, சரின்னா சரி? போ... மீண்டும் கூறுகிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்; கைதட்டுங்கள்,'' என்றார்.
பக்கத்தில் இருந்த அன்புமணி தன் கையில் இருந்த மைக்கை, மேஜையில் கோபமாக வீசினார். அதை தொடர்ந்து, மேடையில் நன்றி கூற வருபவரின் பெயரை, ஜி.கே.மணி முன்மொழிய முயன்றார்.
அப்போது அன்புமணி மைக்கை வாங்கி, எழுந்து நின்று, ''சென்னை பனையூர், மூன்றாவது தெருவில் ஒரு அலுவலகம் புதிதாக ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து நீங்கள் என்னை பார்க்கலாம்,'' என்று கூறி, தன் மொபைல் போன் எண்ணையும் நிர்வாகிகளின் முன்னிலையில் படித்து காண்பித்து, ''குறித்துக் கொள்ளுங்கள். அங்கு வந்து என்னை நீங்கள் பார்க்கலாம்,'' என்றார்.
இதற்கு கூலாக பதிலளித்த ராமதாஸ், ''இன்னொரு அலுவலகம் திறந்து கொள்ளுங்கள்; நடத்துங்கள் என்று கூறுகிறேன். முகுந்தன் உங்களுக்கு உதவியாக இருக்கப் போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால் அவ்வளவு தான். வேறு என்ன கூற முடியும்? முகுந்தன் தலைவர். நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்.
''நான் என்ன சொல்கிறேனோ, அதை தான் அனைவரும் செய்ய வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள்,'' என்றார்.
தொடர்ந்து, இறுக்கமான முகத்துடன் அன்புமணி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
மாநில இளைஞர் சங்க தலைவராக அறிவிக்கப்பட்ட முகுந்தன், ராமதாசின் மகள் வழி பேரன். குடும்ப உறவினருக்கு பதவி கொடுத்தது தொடர்பாக, மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல், அக்கட்சியினர்இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (டிச.,29) தைலாபுரம் தோட்டத்தில் தந்தையை அன்புமணி சந்தித்தார். இருவரும், குடும்பத்தினர் முன்னிலையில் பிரச்னை பற்றி நீண்ட நேரம் பேசினர்.பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். பா.ம.க., வளர்ச்சிப் பணிகள் குறித்து ராமதாஸ் உடன் பேசினேன். 2026ம் ஆண்வு சட்டசபை தேர்தல், ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளோம்.
இதற்கு ஏற்ப எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையில் விவாதித்தோம். எங்கள் கட்சி ஒரு ஜனநாயகம் கட்சி. ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம். எங்களுக்கு ஐயா, ஐயா தான். இன்றைக்கு ஐயாவிடம் பேசி கொண்டு இருந்தோம். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை. எங்களுடைய உட்கட்சி பிரச்னை. நாங்கள் பேசி கொள்ளுவோம். இவ்வாறு அன்புமணி கூறினார்.