தனியார் நீர் மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாரியம் தாமதம்
தனியார் நீர் மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாரியம் தாமதம்
ADDED : செப் 21, 2025 05:17 AM

சென்னை: தனியார் இடத்தில் நீரேற்று மின் நிலையம் மற்றும் சிறிய நீர் மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் தருவதில், தமிழக மின் வாரியம் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நீர் மின் நிலையம், நீரேற்று மின் நிலையங்களை, மின் வாரியம் மட்டுமே அமைத்துள்ளது.
முதல் முறையாக, அத்திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, நீரேற்று மின் திட்டம் மற்றும் சிறிய நீர் மின் திட்டங்களுக்கு தனி கொள்கைகளை, அரசு, 2024 ஆகஸ்டில் வெளியிட்டது.
நீரேற்று மின் நிலையம் அமைக்கும் இடத்திற்கு அருகில், ஆறுகள் இருக்க கூடாது; கால்வாய், ஆறு, ஓடைகளை உள்ளடக்கிய நீர் நிலைகளில், சிறிய நீர் மின் நிலையம் அமைக்கலாம். ஒரு இடத்தில் குறைந்தது, 100 கிலோ வாட் முதல், அதிகபட்சம் தலா, 5 மெகா வாட் திறனில் இரு அலகுகள் என, 10 மெகா வாட் திறனில், சிறிய நீர் மின் நிலையம் அமைக்கலாம்.
இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்யும். அதன்படி, தனியாரால் தேர்வு செய்யப்படும் இடங்களில், நீரேற்று மின் நிலையம், சிறிய நீர் மின் நிலையம் அமைக்க ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு, பசுமை எரிசக்தி கழகம் அழைப்பு விடுத்தது.
வேலுார் மாவட்டம், அல்லேரியில், 1,800 மெகா வாட் திறனில், நீரேற்று மின் நிலையம் அமைக்க, அதானி நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. தேனி மாவட்டத்தில், பெரியாறு - வைகை அணை பகுதியில், ஒரு நிறுவனம், 7.50 மெகா வாட் திறன் மற்றும், 10 மெகா வாட் திறனிலும்; அதே பகுதியில் மற்றொரு நிறுவனம், 7 மெகா வாட் மற்றும் 2 மெகா வாட் திறனிலும், சிறிய நீர் மின் நிலையங்கள் அமைக்க விருப்பம் தெரிவித்தன.
இந்நிறுவனங்கள் வழங்கிய அனைத்து விபரங்களும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து, மின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து, பசுமை மின் திட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது:
மின் நிலையம் அமைக்க வாரியம் ஒப்புதல் அளித்த பின், அதற்கான பணிகளை துவக்க, பல்வேறு அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். வாரியத்திடம் மின் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லாததுடன், திட்ட பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என்பதால் தான், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, புதிய கொள்கைகள் வெளியிடப்பட்டன.
அதற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஒப்புதல் அளிக்க தாமதம் செய்யப்பட்டால், மற்ற நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்ய வரும்? இவ்வாறு அவர்கள் கூறினர்.