மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் ஒப்புதல் அளிக்க தாமதிக்கும் வாரியம்
மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் ஒப்புதல் அளிக்க தாமதிக்கும் வாரியம்
ADDED : அக் 09, 2025 01:54 AM
சென்னை:வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் ஒப்புதல் அளிக்க, தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சாதகமான வானிலை நிலவுவதால், பெரிய நிறுவனங்கள் அதிக திறனில் அமைக்கின்றன. இது தவிர வீடு, கல்வி, தனியார் நிறுவனங்களில், மின் கட்டண செலவை குறைக்க, கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இதற்கான யூனிட்களை கணக்கிட்டு, மின் கட்டணத்தில் சரி செய்து கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்தால், தினமும் சராசரியாக, 4 - 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனால், இரு மாதங்களுக்கு, 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், மின் கட்டணம் வருவதில்லை.
வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. எனவே, பலரும் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் என, மொத்தம், 79,000 இணைப்புகளில், 1,163 மெகா வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், மின் நிலையம் அமைக்க, 25,000க்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதற்கு மின் வாரியம் ஒப்புதல் அளிக்க, தாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்துக்கு ஒப்புதல் அளிக்க, மின் வாரியம் தரப்பில் தாமதம் செய்யப்படுகிறது. இது குறித்து, மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று கேட்டால் அங்கு பணிபுரிவோர், 'ஆதாயம்' எதிர்பார்க்கின்றனர்' என்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரவு, மழைக் காலங்களில் சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது; எனவே, மின் நிலையம் அமைத்தாலும், மின் வாரிய மின்சாரமும் பயன்படுத்த வேண்டும்.
வீடுகளில், 10 கிலோ வாட் வரை, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மின் வாரிய அலுவலகங்களில், சாத்தியக்கூறு ஒப்புதல் பெற தேவையில்லை. சூரியசக்தி மின் நிலையம், மின் வழித்தட இணைப்பு பாதுகாப்பை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இதற்கு, பல அலுவலகங்களில் தாமதம் செய்ய ப்படுவதாக, தலைமை அலுவலகத்திற்கு புகார் வருகிறது. எனவே, சூரியசக்தி மின் நிலையத்துக்கு பெறப்படும் விண்ணப்பம், ஒப்புதல், விண்ணப்ப நிலுவை உள்ளிட்டவை தொடர்பாக, தனி குழு அமைத்து உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.