சர்க்கரை நோய்க்கான மருந்தில் பக்கவிளைவு பாதிப்பு குறிப்பு தயாரிப்பாளர்களுக்கு வாரியம் உத்தரவு
சர்க்கரை நோய்க்கான மருந்தில் பக்கவிளைவு பாதிப்பு குறிப்பு தயாரிப்பாளர்களுக்கு வாரியம் உத்தரவு
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:24 PM
சென்னை: ‘சர்க்கரை நோய்க்கான, ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்து அட்டையில், பக்க விளைவு விபரங்களை குறிப்பிடுவது கட்டாயம்’ என, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு, ‘மெட்பார்மின், சிடாக்ளிபிடின், செமகுளூடைன், டெனிலிக்ளிப்டின்’ உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் எதிர்விளைவுகள் குறித்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இதில், ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்தில், ‘புல்லஸ் பெம்பிகாய்டு’ என்ற நோய் அரிதாக ஏற்படுவது தெரியவந்தது. இது எதிர்ப்பாற்றல் சார்ந்த பாதிப்பு. இந்நோய் தாக்கினால், தோலில் அரிப்பு, வலியுடன் கூடிய நீர் கொப்பளங்கள் உருவாகும்.
எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும், ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்துகளின் அட்டையில், ‘புல்லஸ் பெம்பிகாய்டு’ பாதிப்பையும் எதிர் விளைவாக சேர்க்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ராஜீவ்சிங் ரகுவன்ஷி, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து மாநிலங்களும், ‘டெனிலிக்ளிப்டின்’ மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நிபுணர் குழு பரிந்துரையை அமல்படுத்த, உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அம்மருந்தின் விளம்பரப் பிரசுரங்கள் மற்றும் அட்டைகளில், 'புல்லஸ் பெம்பிகாய்டு' ஒரு பக்கவிளைவு என்பதை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையையும், மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
