காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க தனியாருக்கு வாரியம் அழைப்பு
காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க தனியாருக்கு வாரியம் அழைப்பு
ADDED : நவ 14, 2025 12:59 AM
சென்னை:துாத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில், 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி மற்றும் 18.75 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, காற்றாலை, சூரியசக்தி, 'பேட்டரி ஸ்டோரேஜ்' ஆகிய பசுமை மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, மதுரை புளியங்குளம், கன்னியாகுமரி முப்பந்தலில், ஏற்கனவே மிக குறைந்த திறனில் உள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக, 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம், 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
இது தவிர, திருப்பூர் மாவட்டம் பல்லடம், புதுக்கோட்டை, கோவை காரமடை, தேனி உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்படும், 375 மெகாவாட் பசுமை மின்சாரத்தை, நான்கு மணி நேரத்துக்கு சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' திட்டத்தை செயல்படுத்தவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் இடம் வழங்கும். கூட்டு நிறுவனம் தன் சொந்த செலவில் மின் நிலையம் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் அமைத்து, பராமரிப்பு, இயக்க வேண்டும். அதனிடமிருந்து மின்சாரத்தை வாரியம் வாங்கும்.

