'வீடுகள் கட்ட வாரியம் தயார்; நிலம் கிடைப்பதில் தான் பிரச்னை'
'வீடுகள் கட்ட வாரியம் தயார்; நிலம் கிடைப்பதில் தான் பிரச்னை'
ADDED : மார் 25, 2025 01:01 AM

சென்னை : ''வீட்டுவசதி வாரியத்திற்கு வீடு கட்டுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. நிலம் எடுப்பதில் தான் பெரும் பிரச்னை உள்ளது,'' என, வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஜெயகுமார்: பெருந்துறையில், 2,700 ஏக்கரில், சிப்காட் தொழில் நகரம் சிறப்பாக இயங்கி வருகிறது. கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அரசுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு வீட்டுவசதி வாரியம் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்
அமைச்சர் முத்துசாமி: அது, அரசுக்கு சொந்தமான நிலம். அரசு நிலங்களில் கட்டப்படும் கட்டடங்களை, அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்பாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
வீட்டு வசதி வாரியம் நேரடியாக எடுக்கும் இடங்களில் மட்டுமே வீடு கட்டி, மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியும். இந்த இடம் குறித்து, வருவாய் துறையிடம் பேசி, அவர்கள் கொடுத்தால், அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யலாம்.
ஜெயகுமார்: பெருந்துறையில் எட்டு பேரூராட்சிகள் உள்ளன. இங்கு ஒரே வீட்டில் நான்கு, ஐந்து குடும்பங்கள் வசிக்கின்றன. ஒவ்வொரு பேரூராட்சியிலும் 1,000 வீடுகள் கட்டி, அமைச்சர் புரட்சியை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அமைச்சர் முத்துசாமி: நிலம் எடுப்பதில் தான் பெரும் பிரச்னை உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு வீடு கட்டுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. இடம் கிடைப்பது சாதாரணமான விஷயம் இல்லை.
பெருந்துறையில் இடம் கிடைத்தால், அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. எம்.எல்.ஏ., இந்த அளவிற்கு சொல்வதால், அங்கு இடம் கிடைக்குமா என ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.