விவசாயிகள் மீது குண்டு வீச்சு அமைச்சர் 'திடுக்' தகவல்
விவசாயிகள் மீது குண்டு வீச்சு அமைச்சர் 'திடுக்' தகவல்
ADDED : பிப் 16, 2024 12:38 AM
சென்னை:''ஹரியானாவில் விவசாயிகள் மீது, 'ட்ரோன்'களை பயன்படுத்தி வெடிகுண்டு வீசப்பட்ட வரலாறு, நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது,'' என, அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - காமராஜ்: திருவாரூர் மாவட்டம் குடவாசலை தலைமையிடமாக வைத்து, புதிய பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும்.
அமைச்சர் மனோ தங்கராஜ்: விவசாயிகள் பால் விலையை உயர்த்த கோரிக்கை வைத்ததும், முதல்வர், லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை உயர்த்தினார். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று, பால் விற்பனை விலையை உயர்த்தவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு.
சபையில் உள்ள அனைவரும் வேதனையோடு உள்ளோம். காரணம், நேற்று முன்தினம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய நேரத்தில், ஹரியானாவில், 'ட்ரோன்'களை பயன்படுத்தி, அவர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்ட வரலாறு, நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
குடவாசல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, திருவாரூர் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு பால் கொண்டு செல்லப்படுவதால், குடவாசலில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க அவசியம் எழவில்லை.
இவ்வாறு, விவாதம் நடந்தது.