'அரிசி மூட்டை போல புத்தக பை கொடுமைக்கு முடிவு கட்டணும்!'
'அரிசி மூட்டை போல புத்தக பை கொடுமைக்கு முடிவு கட்டணும்!'
ADDED : செப் 23, 2024 02:44 AM

சென்னை: 'மாணவர்கள் தங்களுக்கு இணையான எடையுள்ள புத்தக பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு, உடனே முடிவு கட்ட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.
அவரது அறிக்கை:
அரிசி மூட்டைக்கு இணையான எடை உடைய புத்தக பைகளை, பள்ளி மாணவர்கள் சுமந்து செல்கின்றனர். சுமை துாக்கும் தொழிலாளர்களை போல, புத்தக பைகளை சுமந்து செல்லும் குழந்தைகள், காலப்போக்கில் முதுகு தண்டு வளைந்து, கூன் விழுந்தவர்களை போல மாறி விடுகின்றனர்.
தமிழகத்தில் எந்த ஊரை, எந்த தெருவை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய மாணவர்களை பார்க்க முடியும். குழந்தைகளின் இந்த நிலைமைக்கு, பெற்றோரின் அறியாமையும், தனியார் பள்ளிகளின் பேராசையுமே காரணம்.
எந்த பள்ளிகள் ஆங்கிலத்தில் கல்வி வழங்குகின்றனவோ; பாடச்சுமை அதிகமாக உள்ளதோ; அதுதான் சிறந்த பள்ளி என்ற மாயை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. அதிக எடை உடைய புத்தக பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்தபடி, 3 - 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது தான்.
பள்ளிக்கு சென்று வந்தபின், முதுகுவலி, உடல்வலி போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட அன்றைய பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை.
தங்களுக்கு இணையான எடை உடைய புத்தக பைகளை, மாணவர்கள் சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனே முடிவு கட்டவேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான, ஒரே எண்ணிக்கையிலான பாடநுால்கள் மட்டும் கற்பிக்கும் வகையில், மாநில கல்வி கொள்கையை தமிழக அரசு இறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.