'கொடை'யில் சவாரி செய்த சிறுவனை ரோட்டில் இழுத்து சென்ற குதிரை
'கொடை'யில் சவாரி செய்த சிறுவனை ரோட்டில் இழுத்து சென்ற குதிரை
UPDATED : ஏப் 23, 2025 08:20 AM
ADDED : ஏப் 22, 2025 09:44 PM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சவாரி செய்த சிறுவனை குதிரை ரோட்டில் இழுத்து சென்றது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெயராஜ் குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இவரது மகன் ஜோயல் கேப்சன் 9, ஏரிச்சாலையில் நேற்று மாலை குதிரை சவாரி செய்ய தயாரானர். அப்போது எதிரே மறுமுனையில் வந்த குதிரை சுற்றுலா பயணி ஒருவரை கீழே தள்ளி மிரண்டு ஓடியது. இதை கவனித்த சிறுவன் சவாரி செய்த குதிரையும் மிரண்டு ஓடியது. சுற்றுலா பயணிகள் மிரண்டு ஓட செவன் ரோடு பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த காரின் பக்கவாட்டில் மோதி சிறுவன் தலைகீழாக தொங்கியபடி கிடந்தார். இவரை நுாறு மீட்டர் துாரம் ரோட்டில் தரதரவென குதிரை இழுத்து சென்றது.பின்னர் சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
சிறுவன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவிக்கு பின் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குதிரை மிரண்டு ஓடியதில் சிறுவன் ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற காட்சி அப்பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை பதற வைத்தது. சிலர் கண்கலங்கினர்.
கண்டுகொள்ளாத நகராட்சி, போலீசார் :
ஏரிச்சாலையில் காலம், காலமாக குதிரை சவாரி செய்யப்படுகிறது. குதிரை சவாரி செய்யும் பயணிகளுடன் செல்லும் வழிகாட்டி குதிரையை கையில் பிடிக்காமல் சைக்கிளில் செல்வது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த போதும் நகராட்சி, போலீசார் கண்டுகொள்வதே இல்லை. வரும் காலங்களில் குதிரை சவாரி பாதுகாப்பான வழிமுறைகளுடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழிமுறைகள் வகுக்கப்படும்:
நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கூறுகையில்,''குதிரை சவாரி பாதுகாப்பு வழிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். குதிரை சவாரியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது குறித்து கிண்டி குதிரை சவாரி மையத்தில் ஆலோசிக்கப்பட்டு இதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்,'' என்றார்.