கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
ADDED : ஜூலை 07, 2025 07:27 PM

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கட்டு விரியன் பாம்பு தீண்டியதில் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட சிறுவனை, ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் 10 நாள் தொடர் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி செல்வி. கூலி தொழிலாளர்கள். இவரது மகன் ஜெயசூர்யகுமார், 11. சிறுவன் அங்குள்ள பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த, 26ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, சிறுவன் ஜெயசூர்யகுமாருக்கு கடும் வயிற்று வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவிக்கு பின், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவன் மயக்கத்துடன், சுய நினைவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அதேநேரம், அச்சிறுவன் துாங்கிய இடத்தில் கட்டு விரியன் பாம்பு இருப்பதை, உறவினர்கள் பார்த்து தெரிவித்தனர்.
உடனடியாக சுதாரித்து கொண்ட அரசு டாக்டர்கள், சிறுவனுக்கு, விஷ முறிவுக்கான மருந்துகள் வழங்கினர். சிறுவனுக்கு சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு குறந்த நிலையில், 2 நாட்கள் வெண்டிலேட்டரில் வைத்தனர். 20 பாட்டில்கள் விஷ முறிவு மருந்து செலுத்தி, தொடர் சிகிச்சை அளித்தனர். 10 நாட்கள் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில், சிறுவன் முழுமையாக குணம் அடைந்தான்.
இதுபற்றி, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா கூறியதாவது:கட்டுவிரியன் பாம்பு, இரவு நேரங்களில் நடமாடுவதுடன், கடிக்கும் தன்மை கொண்டது. எனவே கிராமங்களில், கட்டுவிரியன் பாம்பு நடமாடும் பகுதியில் வசிப்போர், தரையில் படுத்து துாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கட்டுவிரியன் பாம்பு கடித்தால் கடும் வயிற்று வலி ஏற்பட்டு, நரம்பு மண்டலம் பாதித்து உயிரிழப்பு ஏற்படும்.
பாம்பு கடித்தால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும். சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டதால், குணமடைந்துள்ளான்.இவ்வாறு சசிரேகா தெரிவித்தார்.