UPDATED : செப் 30, 2023 02:27 AM
ADDED : செப் 30, 2023 01:22 AM

சென்னை:''தமிழ் பிராமி எனும் தமிழி எழுத்துகளில் இருந்தே, பிராமி எழுத்துகள் தோன்றி இருக்கலாம்,'' என, மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சா., நுாலகத்தின் செயலருமான சத்தியமூர்த்தி பேசினார்.
உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்த, 'சீவக சிந்தாமணி - மூலமும் உரையும்' என்ற நுாலின் எட்டாம் பதிப்பு, சென்னை, ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.
நுாலை, உ.வே.சா., நுாலக தலைவரும், வி.ஐ.டி., பல்கலையின் வேந்தருமான விஸ்வநாதன் வெளியிட, சேக்கிழார் ஆராய்ச்சி மைய செயலர் சிவாலயம் மோகன் பெற்றுக் கொண்டார்.
![]() |
அடிக்குறிப்புகள்
உ.வே.சா., நுாலக செயலர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசியதாவது:
தமிழகத்தின் கடந்த நுாற்றாண்டு வரலாற்றை அறிய விரும்புவோர், உ.வே.சா., எழுதியுள்ள, 'என் சரித்திரம்' நுாலை கட்டாயம் படிக்க வேண்டும். உ.வே.சா.,வின் வரலாற்றில், சீவக சிந்தாமணி ஒரு திருப்புமுனையாக அமைந்த நுால்.
காரணம், அந்த நுாலைப் பற்றி, நீதிபதி ராமசாமி முதலியார் கூறும் வரை, இவர் சைவ சமயம் சார்ந்த நுால்களை மட்டுமே ஆராய்வதும், பதிப்பிப்பதுமாக இருந்தார்.
அதன்பின், எட்டாண்டு கள் சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்தும், பலரிடம் விளக்கம் கேட்டும், தன்னை தெளிவுபடுத்திக் கொண்டு, தன் விருப்பங்களை கலக்காமல், இதை பதிப்பித்தார்.
இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தங்களையும் கண்டறிந்து, பிரிட்டிஷாரின் ஆய்வு முறையில் அணுகி, நுணுக்கமாக ஆராய்ந்து, அடிக்குறிப்புகளுடன் செம்மையான பதிப்பாக்கினார். இசை, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், அந்த நுாலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நுாலை கண்டறிந்த பின்தான், மற்ற சங்க இலக்கியங்களையும் தேடி பதிப்பித்தார். அந்த வகையில், உ.வே.சா.,வின் பதிப்புக்கு, ஒரு சமண இலக்கியமான சீவக சிந்தாமணி துணை நின்றது. அதுபோல், தமிழ் எழுத்து வளர்ச்சிக்கும், சமணர் கல்வெட்டுகள் தான் துணைபுரிந்துள்ளன.
அதாவது, அசோகர் பிராமியில் இருந்து தான் தமிழ் எழுத்துகள் வளர்ச்சியடைந்ததாகவும், ஒலிமாற்றுடன் கூடிய 'க' என்ற வர்க்க எழுத்தை, தமிழுக்கு ஏற்ப சமணர்கள் ஒரே எழுத்தாக மாற்றி எழுதினர் என்றும், வடமாநில ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், 1924ல், கே.வி.சுப்பிரமணியன் அய்யர் என்பவர், ஸ்ரீலங்கன் கல்வெட்டுகளை எடுத்துக்காட்டி, தமிழ் பிராமி எழுத்துகள் மாறுபட்டவை என்றும், தனியானவை என்றும் விளக்கினார். அதற்கு சான்றாக மாங்குளம், கழுகுமலை கல்வெட்டுகள் உள்ளன.
தமிழ் எழுத்துகள் மற்ற பிராமி எழுத்துகளை விட முற்பட்டவை என்பது குறித்து, ஐ.மகாதேவன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தற்போதைய நிலையில், தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்து தான் மற்ற பிராமி எழுத்துகள் உருவாகி இருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
அதற்கு சாதகமாக, நமக்கு பானை எழுத்துகளும், கல்வெட்டுகளும் தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன; தொடர்ந்து ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. இதற்கான விடை விரைவில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்தித்த சவால்கள்
நுாலை வெளியிட்ட வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், ''தமிழ் தான், உலகில் உள்ள செம்மொழிகளில் தொன்மையும், தொடர்ச்சியும், கால மாற்றத்தை உள்வாங்கும் தன்மையும் கொண்ட ஒரே மொழி.
''தமிழை தாய்மொழி யாக கொண்டவர்கள் தமிழில் பேசவும் எழுதவும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டவும் வேண்டும்,'' என்றார்.
பேராசிரியர் அரங்க ராமலிங்கம், உ.வே.சா.,வுக்கும், அவரின் ஆசிரியரான மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் இருந்த உறவு, சீவக சிந்தாமணியை பதிப்பிக்க உ.வே.சா., சந்தித்த சவால்களை பற்றியும் பேசினார்.
நிகழ்வில், கல்லுாரி துணை முதல்வர் ருக்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

