முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிராமணர் சங்கத்தினர் மனு
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிராமணர் சங்கத்தினர் மனு
ADDED : நவ 29, 2024 01:41 AM

சென்னை:தமிழக பிராமணர் சங்கம் சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
முற்பட்ட சமுதாயத்தில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், தக்கார் நியமனத்தில் பிராமண சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு தேர்வுகள், வேலை வாய்ப்புகளில், முற்பட்ட சமூகத்தினருக்கான வயது வரம்பை, 32லிருந்து 35 ஆக உயர்த்த வேண்டும்
ஊடகம், பத்திரிகைகளில், பிராமண சமூகத்தின் பழக்க வழக்கங்களை, மத நம்பிக்கையை இழிவு படுத்துபவர்கள் மீது, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வெறுப்பூட்டும் பேச்சுக்களை தடை செய்ய வேண்டும்
தமிழக தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டு, நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மறைந்த ஆர்.வெங்கட்ராமனின் நுாற்றாண்டு விழா நினைவாக, அம்பத்துார் கிண்டி தொழிற்பேட்டையில் திருஉருவச்சிலை நிறுவ வேண்டும்
கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பொது நல சேவகரும், பிராமணர் சங்க நிறுவனர்களில் ஒருவருமான, காசிராமன் நினைவை முன்னிட்டு, அவரின் உருவச்சிலையை கும்பகோணத்தில் நிறுவ அனுமதி தர வேண்டும்.
இவ்வாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, பிராமணர் சங்க மாநில பொருளாளர் ஜெயராமன், மாநில இளைஞரணி செயலர் பிரகாஷ், துணை பொதுச்செயலர் பார்த்தசாரதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் ராஜகோபால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.