'பிராமணர்களை திட்டி, கொடுமைப்படுத்தி வில்லனை போல சித்தரித்து விட்டனர்'
'பிராமணர்களை திட்டி, கொடுமைப்படுத்தி வில்லனை போல சித்தரித்து விட்டனர்'
ADDED : பிப் 01, 2024 12:27 AM

திருவண்ணாமலை: ''பிராமணர்களை திட்டி திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை, தி.மு.க.,வினர் மாற்றி விட்டனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில், 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நிகழ்ச்சியில், மக்களிடையே தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைகளை, 10 ஆண்டுகளில் மோடி தீர்த்து வைத்துள்ளார். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, இந்தியாவின் ஓர் அங்கமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒரு பக்கம், கலாசார மீட்டெடுக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும், 2047ம் ஆண்டில், பொருளாதாரத்தில் முதன்மையாக மாற உள்ளது.
தி.மு.க., அடாவடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கை நீட்டி அடித்தார்.
நீதிமன்றம், மூன்று முறை ஜாமின் வழங்காமல் தள்ளுபடி செய்த நிலையில், அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. பல் பிடுங்கின பாம்பை போல இங்குள்ள எஸ்.பி., உள்ளார். அவருக்கு ஐ.பி.எஸ்., போட தகுதியிருக்கிறதா.
யோகி முதல்வராக இருக்கும் உத்தரபிரதேசத்தில், போலீசார் மீது கை வைத்தால், அவன் கை இருந்திருக்காது. அதனால் தான் உ.பி., வளர்கிறது. நேர்மைக்கான மரியாதையை, தி.மு.க., கொடுக்கவில்லை.
திருவண்ணாமலையில், பா.ஜ., வென்றால், அருணாசலேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு, 1,000 கோடி ரூபாய் கொண்டு வருகிறோம். வாரணாசி போல மாற்றி தர முடியும். மோடிக்கு வாக்களியுங்கள். ஹிந்து மதத்திற்கு எதிரான ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது.
திருமாவளவனின் சனாதன பிரச்னை என்னவென்றால், பிராமணர்கள் மட்டும் தான், கோவில் கருவறைக்குள் போக முடியும். அதனால் தான் எதிர்க்கிறேன் என்றார்.
இன்று பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார்.
இதுதான், அவங்க பித்தலாட்ட தனம், பிராமணர்களை திட்டி, திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை மாற்றி விட்டனர்.
ஸ்டாலின் கூறுவார், 'பா.ஜ., மதவாத கட்சி' என்று. ஆனால், உதயநிதி மேடையேறி, 'நான் ஒரு கிறிஸ்துவன், அந்த வழிமுறையை பின்பற்றுகிறேன். என் மனைவி கிறிஸ்துவர்' என கூறுகிறார்.
அது மதவாதம் இல்லையாம். இது என்ன பித்தலாட்டம். 19 நாடுகள், அமைப்புகள், மோடிக்கு உயரிய விருது கொடுத்தன. அதில், எட்டு இஸ்லாமிய நாடுகள் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.