தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்; பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்; பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
UPDATED : மார் 08, 2026 09:50 AM
ADDED : மார் 08, 2026 07:49 AM

சென்னை: தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வெல்லும் தமிழ்ப் பெண்களே, நீங்கள் வெல்வதற்கு உலகும் உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது.
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன் நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடும்பத்தின் ஆணி வேர்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் ஜெயலலிதா பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அன்பின் அடையாளம்
இன்றைய திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும், விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும். பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.
பாதுகாப்பு
மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன். தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

