லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது: அங்கித் திவாரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து
லஞ்சம் வாங்குவது நாட்டு வளர்ச்சிக்கு எதிரானது: அங்கித் திவாரி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கருத்து
UPDATED : மார் 15, 2024 03:54 PM
ADDED : மார் 15, 2024 03:47 PM

மதுரை : திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2018ல் வழக்கு பதிந்தனர். மதுரை அமலாக்கத்துறை இயக்குனரக தென் மண்டல துணை இயக்குனர் அலுவலக அதிகாரி அங்கித்திவாரி அலைபேசியில், 'சொத்து குவிப்பு தொடர்பாக உங்களுக்கு எதிராக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும்,' என சுரேஷ்பாபுவிடம் தெரிவித்தார். வழக்கை முடிக்க அங்கித்திவாரி ரூ.50 லட்சம் பேரம் பேசினார்.
சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரியை 2023 டிச.,1ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவர், 'கைதாகி 60 நாட்களுக்கு மேலாகிறது. போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அந்நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அதை ரத்து செய்து ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அங்கித்திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல் அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது சகித்து கொள்ள முடியாதது. அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

