ரயில்கள் அதிவேகத்தில் செல்ல பாலங்கள் வடிவமைப்பு மாற்றம்
ரயில்கள் அதிவேகத்தில் செல்ல பாலங்கள் வடிவமைப்பு மாற்றம்
UPDATED : மே 22, 2025 03:18 AM
ADDED : மே 22, 2025 12:54 AM

சென்னை:''ரயில்வே பாலங்கள் கட்டுமானத்தில், சி.எஸ்.ஐ.ஆர்., - ஐ.ஐ.டி., நிறுவனங்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது,'' என, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை செயல் இயக்குநர் ரவிந்திரகுமார் கோயல் கூறினார்.
சென்னை, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் மூன்று நாள் வைர விழா மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பாலங்கள் பிரிவு முதன்மை செயல் இயக்குநர் ரவிந்திரகுமார் கோயல் பேசியதாவது:
ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதில், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உதவுகிறது. குறிப்பாக, ரயில்வே பாலங்களின் கட்டுமானத்தில் பெரிய பங்களிப்பை, இவை அளிக்கின்றன.
இந்தியாவில் 1 லட்சத்து, 63,810 ரயில்வே பாலங்கள் உள்ளன. அதில் மிக முக்கிய பாலங்கள் 740; பெரிய பாலங்கள், 13,176; சிறிய பாலங்கள், 1 லட்சத்து, 49,894 உள்ளன. சமீபத்தில் கூட, புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பாலங்களின் தாங்கும் திறனை அதிகரிக்க வழி செய்யப்படுகிறது. முக்கியமான, 204 பாலங்கள், 100 ஆண்டுகள் தாண்டியவை. ஏதாவது சிறு பிரச்னை ஏற்படும்போது, அதன் பழமை மாறாமல் சரி செய்து வருகிறோம்.
ரயில் பாலங்களில் சரக்கு ரயில்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்திலும், பயணி ரயில்கள் மணிக்கு 160 கி.மீ., வேகத்திலும் இயக்க, அதிக எடையை தாங்கும் வகையில், பாலங்களின் வடிவமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு கோயல் கூறினார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் பேசியதாவது:
கடந்த 20 ஆண்டுகளில், இந்திய ரயில்வே பல கட்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. சீனாவை காட்டிலும், நாம் ரயில்வே துறையில் வேகமாக வளர்ந்து வருகிறோம்.
கொரியாவில் சிறிய அளவிலான இரும்பு பாலங்களை அமைக்க சிரமப்படுகின்றனர். ஆனால், நாம் மிகப்பெரிய அளவிலான இரும்பு ரயில்வே பாலங்களை அமைத்து வருகிறோம்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகளை காட்டிலும், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில், பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறாம். மாற்றங்கள் இன்னும் தேவைப்படுகின்றன.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அப்படியே, 'காப்பி' அடிக்க வேண்டியதில்லை. நம்மிடம் நல்ல திட்டமிடலும், திறமையும் இருக்கிறது. ஆனால், அதை சிறப்பாக செயல்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. இது மாற வேண்டும்.
இவ்வாறு அர்ச்சுனன் கூறினார்.
சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குநர் ஆனந்தவல்லி, தலைமை விஞ்ஞானிகள் ஸ்ரீனிவாஸ் வோக், இங் சப்தர்ஷி சஸ்மல், பாரிவள்ளல் பங்கேற்றனர்.