
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எளிமையாக வாழ்வது இறைநம்பிக்கையின் பாற்பட்டதாகும்.'' எளிய நிலையில் வாழ்வது இறைநம்பிக்கையாளனுக்குரிய தன்மைகளுள் ஒன்று.
ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு மறுமை வாழ்வை நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் சிந்தனையே மேலோங்கி இருக்கும். உலக வாழ்வின் படாடோபங்கள் (ஆடம்பரங்கள்), அலங்காரங்களிலெல்லாம் அவனுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. நோன்பிருக்கும் இந்த நல்ல வேளையில், எளிய வாழ்வு வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஒருமுறை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் உடலில் புழுதி படிந்த தலைவிரிகோலமான ஒரு மனிதரைக் கண்டார்கள். ''இந்த மனிதரிடம் தலைவாரிக் கொள்வதற்குச் சீப்பு எதுவும் இல்லையா?'' என்று வினவினார்கள். பிறகு, அண்ணலார் அழுக்கான ஆடைகள் அணிந்திருந்த இன்னொரு மனிதரைக் கண்டார்கள். ''இந்த மனிதரிடம் ஆடைகளைத் துவைத்துக் கொள்வதற்கான பொருள் (சோப்பு) இல்லையா?'' என்று கேட்டார்கள்.
இப்படியெல்லாம், ஏழைகள் நம் மத்தியில் உலாவரத்தான் செய்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாமல் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் உதவிசெய்து, அவர்களையும் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்ல இந்த நோன்பு காலத்தில் உறுதியெடுப்போம். எளிமையே இனிமை தரும் என்பதை உணர்வோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: 4.33 மணி.