மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்
மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட பிரிட்டன் விருப்பம்
ADDED : ஜூலை 24, 2025 01:27 AM

சென்னை: தமிழக மின் தேவையை மு ன்கூட்டியே துல்லியமாக அறிதல், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக, மின் வாரியத்துடன் இணைந்து செயல்பட, பிரிட்டன் விருப்பம் தெரிவித்துள்ளது.
அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும் என்பதை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், முந்தைய நாளே கணித்து, அதற்கு ஏற்ப உற்பத்தி, கொள்முதல் பணிகளை மேற்கொள்கிறது.
மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது உள்ளிட்ட பணிகளை, மின் வாரியத்துடன் இணைந்து செயல்படுத்துவது தொடர்பாக, சென்னையில் மின் வாரிய அதிகாரிகள், பிரிட்டன் துாதரக அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில், மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பசுமை எரிசக்தி கழக மேலாண் இயக்குனர் அனிஷ்சேகர், பிரிட்டன் காலநிலை மாற்ற ஆலோசகர் நயனிகா, நிலைத்தன்மை காலநிலை மாற்ற ஆலோசகர் க்ரித்திகா குலாட்டி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
இக்கூட்டத்தில், மின் தேவையை முன்கூட்டியே துல்லியமாக அறிதல், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு, தரவு பகுப்பாய்வு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப தீர்வு, இணைய பாதுகாப்பு, நுகர்வோர் மைய மேம்பாடு ஆகிய பணிகளில், இரு தரப்பும் இணைந்து செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த திட்டங்களுக்கு மின் வாரியம் செலவு செய்யாது என்றும், பிரிட்டன் தன்னுடைய செலவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இத்திட்டங்கள் தொடர்பாக, இரு தரப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப, வரைவு ஒப்பந்த அறிக்கை தயார் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏனெனில், அப்போது தான் ஏதோ பேச்சு நடத்தப்பட்டது என்று விட்டு விடாமல், இந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.