கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு நவம்பரில் ரூ.300 கோடி இழப்பு
கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு நவம்பரில் ரூ.300 கோடி இழப்பு
ADDED : டிச 09, 2024 08:50 AM
நாமக்கல் : தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளில், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழுவான பி.சி.சி., தினமும் நிர்ணயம் செய்கிறது. நேற்று முன்தினம், கறிக்கோழி விலை, 16 ரூபாய் சரிந்து, 78 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணை யாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
கறிக்கோழி கொள்முதல் விலையில் இருந்து, 30 ரூபாய் வரை குறைத்தே வியாபாரிகள் கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு, 100 ரூபாயாக இருக்கும் நிலையில், அதற்கு மேல் விற்றால் மட்டுமே கணிசமான லாபத்தை பார்க்க முடியும். இதனால், நவ., மாதத்தில் மட்டும், 300 கோடி ரூபாய் வரை பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.