ADDED : பிப் 22, 2024 02:29 AM
சென்னை:எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பெயரை குறிப்பிடாமல், அ.தி.மு.க., - செல்லுார் ராஜு பேசியதை, அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியதால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசினார். அவர் பேச்சை துவக்கியபோது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோருக்கு புகழாரம் சூட்டி, வணக்கம் தெரிவித்தார்.
அதன்பின், அ.தி.மு.க., கொறடா வேலுமணி, சபாநாயகர் அப்பாவு ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு, ''எல்லாருக்கும் வணக்கம் தெரிவித்தீர்கள். மதுரை கண்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் குறித்து, ஒரு வார்த்தை கூறாமல் விட்டுவிட்டீங்களே அண்ணா...'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு பதில் அளித்த ராஜு, ''அவர் எங்கள் தம்பி; என் இதயத்தில் இருக்கிறார். நீங்கள் கூறியதில் ஆட்சேபனை இல்லை. எந்த காரியம் கொடுத்தாலும், தேனீ போல் சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர். போராட்டத்துக்கு பின், அவருக்கு அந்த இருக்கை கிடைத்துள்ளது,'' என்றார்.