திருமணத்திற்கு சகோதரியை பல்லக்கில் சுமந்து வந்த சகோதரர்கள்
திருமணத்திற்கு சகோதரியை பல்லக்கில் சுமந்து வந்த சகோதரர்கள்
ADDED : மார் 11, 2025 03:19 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திருமணத்திற்கு சகோதரியை பல்லக்கில் நான்கு சகோதரர்கள் சுமந்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்பு எளிமையாக நடந்து வந்த திருமணங்கள், தற்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்து வருகிறது. மணமகன், மணமகன் நடனம், போட்டோஷூட் என பல வகையான நிகழ்ச்சிகள் நடப்பது இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
அந்த வகையில், தற்போது காஞ்சிபுரத்தில் நடந்த திருமண நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.
மனோஜ் - யோக லட்சுமி ஆகியோருக்கு நேற்று திருமணம் நடந்தது. முதலில் மனோஜூம் யோகலட்சுமியும் சைக்கிளில் வந்தனர். தங்க நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட சைக்கிளில், மணமகளை முன்னால் உட்கார வைத்து ஓட்டி வந்தார் மணமகன்.பிறகு, திருமண மண்டபத்திற்கு யோகலட்சுமியை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து, அவரது நான்கு சகோதரர்களும் சுமந்து வந்தனர். படைவீரர்கள் போல் உடை அணிந்த சகோதரர்கள், பல்லாக்கில் தங்கையை சுமந்து வந்த காட்சியை பார்த்து உறவினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.